யாரோ அவன்!

நாகரிக உடையணிந்து   
கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே 
உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்
பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு
ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை
குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்
ஒருவேளை உணவுக்காகவோ 
இல்லை வேறு எதுக்காகவோ
வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்; 
இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்
அவனது அவமானங்களை 
யாரும் அனுபவப்பூர்வமாய் 
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை நான் உள்பட;

மாணவன், தொழிலாளி, வியாபாரியென  
பன்முக அடையாளங்களில்  
கைகளில் கைக்குட்டைகளோடு 
முதலாளியாகத் தென்பட்டுக் கொண்டிருந்தான்;
நானுமொரு கைக்குட்டையை 
அவனிடம் வாங்கிக்கொண்டிருந்தேன்;
யாரோ என்னை ஏளனமாய்ப் பார்ப்பதுபோல் பிரம்மை
நான் மட்டும்தான் அவன் சொன்னவிலைக்கே
வாங்கி இருக்கிறேன் போல;
பேரம் பேசுவது சுலபமாகவும்
சிலசமயங்களில் சுகமாகவும் கூட இருக்கிறது;
குளிரூட்டப்பட்ட கடைகளில் 
வாயையே திறக்காமல் பர்சை திறக்கும் கூட்டம்  
இவனைப்போன்ற பாமரர்களிடம் மட்டும் 
பேரம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது;
உள்ளுக்குள் கோபத்தோடும் 
உதடுகளில் சிரிப்போடும் 
அவனிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன்
நாமும் பேரம் பேசி இருக்கலாமோ யென்ற
எண்ண வோட்டங்களோடு!

 - இரா.ச.இமலாதித்தன்

உளறிய வார்த்தைகள்!பலரும் என்னருகில் இருக்கையில்
தனிமைப்படுத்த பட்டிருந்தேன்;
பெரும் சீற்றம் எனக்குள்
கோபத்தீயை கக்கிக்கொண்டிருக்கிறது;
பெரியதோர் பாரம்
தலையினுள் திணிக்கப்படுகிறது;
இது வெறும் மாயையல்ல
உண்மையாகத்தான் இருக்கவேண்டும்
சரியாக உணரமுடியவில்லை;
யாரோசிலர் உரையாட முற்படுகிறார்கள்
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்;
புரியாததை போலிருக்கிறது
புரிந்து கொள்ள முயலவில்லை;
பதில் சொல்லவும் எத்தனிக்கிறேன்
தோல்விதான் மீதாமாக இருக்கிறது;
பலமுறை தோல்வியடைந்து இருக்கிறேன்
ஆனாலும்
வெற்றியாளனாகக் காண்பிக்க
அதைவிட அதிகமாகவே சிரமப்படுகிறேன்;
ஒருவேளை
வெற்றியாளனாகிவிட்டாலும் சிரமப்படலாம்;
கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது
எதையும் எழுதும் மனநிலையில் நானில்லை;
உளறிய வார்த்தைகளை அலங்கரித்து
ஒருவேளை இவையெல்லாம்
கவிதையாக்கப் பட்டிருக்கலாம்
அதற்கு நான் பொறுப்பல்ல!

- இரா.ச.இமலாதித்தன்

வனத்தின் ரணம்!
கசக்கியெறியப்பட்ட காகிதமொன்று 
என்னை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறது
தூதுசொல்ல வந்திருக்கலாம் என்றொரு யூகம்
உளவு பார்க்கிறதாக ஒரு மாயை
அப்படிருக்க வாய்ப்பில்லை;
இது கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டு
ஒருவேளை ஏதோவொன்றை 
எனக்குள் சொல்ல வந்திருக்கலாம்;
அதனுள் பலகதைகள் புதைந்தும் கிடக்கலாம்
இப்படி ஏதேதோ என்னை சூழ 
சரியான கோணத்தில் எதையுமே உணராமல் 
இந்த நொடிக்கான பதிலை 
கடந்தகாலங்களிலேயே தேடிக்கொண்டே
ஓர் அழிவின் அழுகுரலை கேட்க தயங்குகிற
மனதின் சூழ்ச்சியை அறியாமலே
யே   
ஆழமாய் ஓர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்
மரங்களின் அழிவை தடுப்பது எப்படியென்று !

- இரா.ச.இமலாதித்தன்
 

ஞானியின் தேடல்!உறவுகளால் ஒதுக்கிவிடப்பட்டு
அறைக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தவனின்
மரணத்தேதி தெரிந்ததிலிருந்து
நாட்காட்டியின் நாளிதழனைத்தும்
கிழிக்கப்படாமலே கடந்துகொண்டிருந்தது;
இப்போதோ ஞானியாகிவிட்டதாய்
தன்னையுணர முயல்கிறான்;
மயானம் செல்லும் நாளில்
வெறும் உடல் என்றும்;
பிறகொருநாள்
உறவாலும் பெயராலுமே
அடையாளப்படுவதை உணர்ந்தபிறகும்
அவனுக்குள்ளாகவே அவனை
தேடிக்கொண்டே இருக்கிறான்
ஞானியின் தேடல்
முடிந்ததாக தெரியவில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

அழகென்றால் அவள்!

-001-

எது அழகென்பதை 
வரையறுத்து கொண்டிருந்தேன் 
வட்ட நிலவு 
வண்ணங்கள் நிறைந்த மலர்கள் 
மழலையின் சிரிப்பு 
மழைக்கால மேகம் 
நெல்வயலில் ஒற்றை மரம்
நெரிசல் நிறைந்த அலைகள் 
காலைநேர சூரிய உதயம் 
இப்படி ஏதோதோ 
வரிசையாய் நின்றன 
உன்னை பின்தொடர்ந்து!

-002-

பார்வை மட்டுமே 
வேலையென்று இருந்தேன்; 
புன்னகைக்கவும், 
சிறை பிடிக்கவும்,
மௌனமொழி பேசவும் 
எப்படி பழகிக்கொண்டன 
உன்னுடைய விழிகள்?

- இரா.ச.இமலாதித்தன்

நீயுமென் இறைவனே!என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே
எனக்கான வலிகளை
உனக்குள்ளேயே மறைத்து கொண்டிருந்தாய்;
கல்லூரி கடந்த காலக்கட்டத்திலும்
உன் மீதான பயத்தை மட்டுமே
எனக்குள்ளாக திணித்து கொண்டிருந்தேன்;
ஊருராய் வேலைத்தேடி
நாய்போல அலைந்தபோது
எனக்காக நீதானே துயரப்பட்டாய்;
நீயடைந்த கஷ்டங்களை
துளியளவு உணரும் வேளை
வாழ்க்கையென்ற மைதானத்தில்
நானுமொரு தகப்பனாகிவிட்டேன்;
உன் ஒருதுளி விந்தால் உருவாக்கப்பட்ட
இந்த உடலுக்கு நீயுமென் இறைவனென்பதை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்
வெறும் தந்தை மட்டுமே நீயில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

இப்படியுமொரு தேடல்!நேற்றை தொலைத்து
இன்றைக்குள் நாளையினை தேடும்
நவீன மனிதனின் நாகரீகமென்பது
ஆடை குறைப்பு
தாய்மொழி மறந்து பிறமொழி கலப்பு
பணமென்ற இலக்கு
இப்படி கணக்கீடோடு மட்டுமே
நகர தொடங்கி விட்டன;
மனதை உள்ளடக்கிய மனிதனை
இறைவன் தேடிக்கொண்டிருக்க;
இவனோ
பணத்தில், பணத்தால்
இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்;.
இவனது தேடல் 

தினம் தினம்
நடந்து கொண்டேதான் இருக்கிறது
தொலைத்த ஒன்றை
தனக்குள் இருப்பதை தெரியாமலே!

- இரா.ச.இமலாதித்தன்

நான் கேள்வியானால்!எனக்குள்ளேயே கேள்வி அம்புகளால்
துளைத்துக் கொண்டிருந்தேன்
தொலைந்து போன உடலை
தெரிந்து கொள்வதற்காக;
அழியும் உடலையும்
முறியும் உறவையும்
உணர்வதால் என்ன பயனென்று
கேள்வியாகவே பதில் கிடைத்தது;
எனக்கான தேடலில்
கேள்வியும் பதிலும்
என்னுள்ளேயே எப்படியுள்ளதென்பதை
மீண்டுமொரு கேள்வியாக்கினேன்;
உள்ளத்தை கடந்து வா
உள்ளதை உணமையாய் அறிந்து
பெருவேளிச்சமே கடவுளென்பதை
காலம் கடந்தபின் உணர்வாயென
என்னிலிருந்தே ரகசியம் வெளிப்பட;
உள்ளுக்குள் ஆராய்ந்தேன்
பெருவெளிச்சத்தின் அணுவொன்று

அனலாக உறங்கி கொண்டிருக்கிறது
ஆன்மாயென்ற பொதுப்பெயரால்!

- இரா.ச.இமலாதித்தன்

சிலைகளில் இறைவன்!

மாயை சூழ்ந்திருக்கும்
சிலையை கவனித்துக் கொண்டிருந்தேன்
உடலை சிலிர்க்கும்
உருவமொன்று உருவாகிக்கொண்டிருந்தது;

மௌனித்துக் கொண்டிருந்த உதடுகளும்
மெல்லியதாய் முனுமுனுக்க தொடங்கின
செவிக்கொடுத்து கேட்க தொடங்கினேன்
மனம் மட்டுமே புரிந்து கொண்டது;
சட்டென்று கரங்கள் இரண்டும்
வணங்க ஆயத்தமாயின
உணர்ந்து கொண்டேன்
உருவம் கடந்த இறைவன்
சிலையில் மட்டும் இல்லையென்பதை!

- இரா.ச.இமலாதித்தன்

மனமெனும் மாயை!இதயத்திற்குள் அம்பு துளைத்ததாய்
தூரிகையால் வரைந்து கொண்டே
மனது வலிக்கிறதென்றான்;
எது மனமென்றால்
நெஞ்சை தடவிக்கொடுத்து
அதைத்தான் இதயமென்றான்;
மூளை செய்வதையெல்லாம்
அறியாமலே அழுது புலம்பி
இடையில் காதலென்றான்;
இறுதியில் தோல்வியென்று
மரணத்தின் பாதையை தேடத்தொடங்க;

புதியதாய் ஏதோவொன்று
வாழ்வில் இதுவரை உணராததை
உள்வாங்க ஆயத்தமானபோது
இதயம் துளைக்கப்பட்டிருந்தது
ஓவியத்திலல்ல!

- இரா.ச.இமலாதித்தன்