அவளும் நானும்!

-01-

கூடல்கொண்ட மேகங்களின்
பெருமழைச்சாரல் போல
உடலோடு உறவாடி
என்னுயிரை இதழ்களால் உட்கொள்கிறாய்;
நானென்ற வெற்றுடலோ
உன் கூந்தலில் தலை துவட்டுகிறது!

-02-

என் கைப்பிடிக்குள் மவுஸ் போல
சிக்கிக் கொள்கின்றன உன் நினைவுகள்
மவுஸ் பேடாய் தேய்கிறது மனது!

-03-

கண்கள் வழி சிரிக்கிறாய்;
என்னுயிர் உயிர்த்தெழுகிறது.
தென்றல்மொழி பேசுகிறாய்;
தாழிடப்பட்ட மனக்கதவு திறக்கிறது.
இனி உன்னுள் கலந்து நீயாகிறேன்!

-04-

உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியிலும்,
இதுவரை கண்டுபிடிக்காத
புதுப்புது கிரகங்களையெல்லாம் கடந்து வந்து,
அதற்கெல்லாம் உன் பெயரையே சூட்டுகிறேன்!

-05-

உன் விரல்கள் கோர்த்து,
மழலை மொழி பேசி,
நெரிசலான பாதையில் நடக்க ஆசை.
உன்னை பெற்றெடுத்தவங்களுக்கு மட்டுமல்ல,
எனக்கும் நீ சின்ன குழந்தை தான்!

- இரா.ச.இமலாதித்தன்