ஆதாமும் ஏவாளும்!


















உயிர்களனைத்தும் இல்லாதொழிக்கப்பட்ட
ஓர் ஊழிக்காலத்தில்
எட்டுமாத கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து
தன்னந்தனியே இவ்வுலகில்
தப்பிப்பிழைத்த குழந்தையொன்று
நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வந்துபோகும்
சந்திர கிரகணம் நிகழ்ந்தவொரு நாளில்
இளம்வயது கன்னியாக பூப்பெய்த பொழுதில்
காலமென்ற மாயையை வென்ற
சித்தன் போன்ற தோற்றமுடையவனை கண்டதும்
அலறலும் முனகலும் மெளனித்து
இலக்கணமில்லா மொழியொன்று உருவெடுக்கிறது;
பதிமூன்று ஆண்டுகள் சேகரித்தவற்றையெல்லாம்
வார்த்தைகளின் வழியே கொட்டித்தீர்க்க
வரிகளற்ற புது இலக்கியம்
பிரபஞ்சப் பெருவெளியில் எழுதப்படுகிறது;
பெருங்கோவில்களில் வியாபித்திருக்கும்
யாளிகளின் சிலைகளை பார்ப்பது போல
மிச்சமிருக்கும் செல்பேசி கோபுரங்களை
வியப்புடன் பிரமித்து, அவனிடம் கேட்கிறாள்
இது எந்த மிருகத்தின் கால்களென;
கிரகணத்தில் சிக்கி தவித்த
பிறைநிலவின் ஒளி முழுதும்
அவள் முதுகோரம் படரும் வேளையில்
ஆலமர விழுதோரம் அமர்ந்திருந்தவளில்
கருடன் போன்றதொரு நிழலுக்கருகில்
மண்ணுக்குள் பாதி புதையுண்ட
ஆப்பிள் போனை நோண்டியெடுத்து
ஆதியோகியானவன்
பழங்கதை சொல்லும் நாழிகையில்
ஆதாமாய் அடையாளப்படுகிறான்;
மீண்டுமோர் ஏவாள் உருவெடுத்து விட்டாள்
இனி புதிய உலகம் படைக்கப்படுகிறது!

- இரா.ச. இமலாதித்தன்