வார்த்தை!ஆழ் மனதில் புதையுண்ட
எண்ணங்களெல்லாம்
வார்த்தைகளாய் உருமாறி
வரிகளாய் வெளிப்பட்டு
கம்பீரமாய் சிரித்தாலும்
தவழ்ந்து வருகின்ற கைக்குழந்தை
எழுந்து நடப்பது போல்
தடுமாறி உதிர்கின்றன
உன்னிடம் வார்த்தைகளாய்!
உன்னிடம்
சொல்லிவிட்டு திரும்பிய
சொற்கள் அனைத்தும்
வென்றுவிட்ட களைப்பில்
கலைந்து கிடக்கின்றன
அர்த்தங்களற்று!


- இரா.ச.இமலாதித்தன்

உழவர் வாழ்வு! (நாட்டுபுற மெட்டு)(இதுவும் என் முதல் முயற்சி தான்...)


சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா

வம்புதும்பு போனதில்ல வாய்க்காசண்ட ஏதுமில்ல
தண்ணிகேட்டு கத்துறோமே நித்தம்தான்
வயலு தொண்டை போலே வறண்டதென்ன குத்தம் தான்....

ராப்பகலா கண்விழிச்சு வயவரப்புலே கிடந்தாலும்
விடிஞ்சிடாம போனதென்ன வாழக்கைதான் - நல்ல
முடிவுக்காகக் காத்திருக்கோம் வேர்க்கத் தான்....

(சேத்துலதான் காலவச்சு...)

உறக்கம்கெட்டு உழைச்சாலும் பழையசோறு தின்னாலும்
ஊருக்குள்ளே நாங்கயெல்லாம் ஏழைதான்
தெனமும் உருப்படியாக் கூலி வாங்குறதே கஷ்டம்தான்

அன்னந்தண்ணி உண்ணாம அசராம உழைக்குறோமே
ஆக்கிதின்ன அரிசிகொடுத்தா போதுமா
எங்க அடி வவுத்துலே கையை வச்சா நியாயமா

(சேத்துலதான் காலவச்சு...)

விதைநெல்லைக்கூட விலைக்கு வாங்கி விதைக்குறோம் -அந்த
வெள்ளைக்காரன் வித்ததெல்லாம் போலியாம்
அதை விதைச்சு புட்டா மண்ணெல்லாம் மலடியாம்

என்னன்னமோ நடக்குது ஒண்ணுமே புரியலையே
உழைக்கநாங்க காத்திருக்கோம் ஆசையா
கத்திகத்தி கேட்டாலும் கவலைஇங்கே தீரலையே

சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா...

- இரா.ச.இமலாதித்தன்


காதல்ன்னு சொல்லிபுட்டா! (கானா பாட்டு)(என் முதல் முயற்சி...கானா "மாதிரி"...)


அவள பார்த்த நாள்முதலா நானும் தான் தூங்கலையே...
தூங்கமா படுத்திருந்தா நித்தமும் தான்- என் மனசும் தாங்கலையே
என் கண்ணுக்குள்ள வந்துவந்து கனவாகி போனாளே
கணவனாக வரத்தானே வரம் வாங்கி வந்தேனே...

அவகூட பேசலாம்னு பின்தொடர்ந்து வந்தேனே
என்னை கண்டுகிட்டும் காணாம எப்பவுமே போறாளே
என்னான்னு சொல்லுவேன் அவ கண்ணாலே கொல்லுறா
அவகிட்ட என் மனச வித்துபுட்டேன் மொத்தமா
அவ இல்லாம நான் வாழ என்ன செஞ்சேன் குத்தமா...?

மனசை கடன் கொடுக்க கூட அவளுக்கு மனசும் தான் வரலையே
மல்லுகட்டி நிக்குறேனே மன்றாடி பார்க்குறேனே
என்னை காதல் செய்யவே அவளும் தேடிகூட வரலையே
அதற்கான நாளும் இங்கே கைகூடி வரலையோ...?

காதல்ன்னு சொல்லிபுட்டா கடைசி வரைக்கும் கவலைதான்
அதுவே கனவாகி போனதுன்னா நானும் கூட இல்லைதான்
பொண்ணுகிட்டே ஏமாறி பொழப்பும் தான் ஓடுதே
கண்ணேன்னு சொன்னவளும் அம்போன்னு விட்டுட்டா...

- இரா.ச.இமலாதித்தன்

முட்டாள்!
பொட்டிக்குள் பூட்டிவைத்த
வேட்டி சட்டை பளபளக்க
வெட்டித்தனமாய் மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு உதவாதபயலென்று
ஊர்சொல்ல கேட்ட பின்னும்
தலைவன் வந்த கூட்டத்திற்கு
பெயர்பலகை வைத்திடவே
வட்டிக்கு பணம் வாங்கி
நடுத்தெருவில் தொண்டனொருவன்!

கோட்டைக்குள் குறட்டை விட
கட்சிக்குள்ளே போட்டிப் போட்டு
சீட்டு வாங்க கட்டுக் கட்டாய்
நோட்டை கொட்டிக் கொடுத்து
ஒட்டுக்கேட்க தலைவனொருவன்!

நட்டாற்றில் தள்ளிவிட்டு
நாட்டாமை செய்வதற்கு
காட்டாற்று வெள்ளமென
மூட்டை தூக்கி நாட்கள் கடத்தும்
பாட்டாளி வர்க்கம் நானென்று
நாட்டுக்குள் முழங்கிக்கொண்டே 
 
தேர்தலுக்குள் தலைவனொருவன்!

மோட்சமடைந்த முனிவன்போல
நாட்டை காக்க அவதாரம் எடுத்ததாக
வீட்டிற்குள்ளே விளக்கமும் கொடுத்து...
பட்டினி சாவே இல்லாதொழிக்க போவதாய்
காட்டமாய் ஊடகத்தில் பேசிவிட்டு
நட்சத்திர விடுதியில் தானுண்ண
பட்டியலிட்டான் தலைவனொருவன்!

ஓட்டு போட்டு அரியணை ஏற்றிய
பாட்டாளி மக்களுக்கே
வேட்டு வைக்க துணிந்தவனை போற்றி
போட்டிப்போட்டு வாழ்த்து மடல்
பட்டித்தொட்டி எங்கும் பளபளக்க
கடவுள்போல தலைவனொருவன்!

தட்டிக் கேட்க எவனுமில்லை
எட்டு திசையும் எனக்கிங்கு நிகருமில்லை
கட்டம்கட்டி கணக்காய் காயும் நகர்த்தி
பட்டு வேட்டி சட்டையோடு புறப்பட்டான்
எட்டா புகழுடைய தலைவனொருவன்!

கட்டில் தூக்கமே கனவாய் போக
விட்டில் பூச்சியின் வாழ்க்கை போலவே
வட்டிக்கே கடனும் வாங்கி இழுபறியோடு...
தட்டுத் தடுமாறி குடும்பம் நடத்த வழியுமின்றி
பட்ட மரமாய் நடுத்தெருவில் நிற்கிறான்
ஓட்டளித்த முட்டாள் தொண்டனொருவன்!

- இரா.ச.இமலாதித்தன்

_