உடன் பிறப்பே!
செந்தமிழென்றாய்
தன்மக்கள் நீயென்றாய்
என் உடன்பிறப்பே வாவென்றாய்
எப்போதும் நீ மட்டுமே வென்றாய்;
மொழிதான் உன் மூச்சென்றாய்
மூச்சை திணறடித்து
மூழ்கி கிடப்பதுவும் பிடிக்குமென்றாய்;
பகுத்தறிவே தன்மானம் காக்கின்ற
மேலாடை என்றுரைத்தாய் - இப்போதோ
உள்ளாடையே இல்லாமல்
உல்லாசமாய் இருப்பதுகூட பிடிக்கிறதென்கிறாய்;
வாக்களித்தவர்களுக்காகவே வாழ்கிறேனென்றாய்
தமிழகமே தன் குடும்பமென்றாய்
ஓட்டுக்காகவே நீ உளறிக்கொண்டிருப்பதை
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த பின்புதான்
உணர்ந்து கொள்கிறோம் நாங்களும்
உன் குடும்பம் மட்டும் தான்
ஒட்டுமொத்த தமிழகமென்று!

- இரா.ச.இமலாதித்தன்

விழியின் வழியில்!பொன்னிற மாலையில்
மண்ணுக்குள் மூழ்க
ஆயத்தமானது ஆதித்தன்;
வெகுநேரமாய்
நகர்ந்துக் கொண்டிருக்கும்
இந்த பாதையின் சுவடுகள்
நெடுந்தூரம் நீண்டிருக்கவில்லை;
வழி தெரியாமலே
கால்கள் இரண்டும்
ஒன்றோடொன்று முந்திக்கொண்டிருந்தன;
எந்தவொரு துருவமும்
அனுமானிக்கப்படாத வேளையில்
பேரிடருக்குள் அகப்பட்டிருப்பதாய்
அவதானித்திருந்தன விழிகள்;
பேரிருள் சூழ்ந்த
கார்மேக வானை நோக்கி
நிலவை தேடி
தோல்வியடையும் தருவாயில்
மாத வான் விடுமுறையை
நினைவு கூர்ந்து கொண்டிருந்தது மூளை;
வெகுநேர சுழற்சியின்
பயண களைப்பில்
சோர்வோடு திளைத்திருந்தது உடல்;
நீண்ட நேரம் நிகழ்வுகளுக்கிடையில்
காதோரம் ரீங்கரமிட்டது  அழைப்பொலி;
இமைகள் திறக்கும்போது
வெயிலின் வெளிச்சம்
விழிகளுக்குள் ஊடுருவ
மணி ஏழாகி இருந்தது;.
மீண்டுமந்த வழமையான
அலுவல்கள் தொடர
எழுந்து கொண்டிருக்கிறேன்
கனவிலிருந்து!

- இரா.ச.இமலாதித்தன்

அடையாளம்!மதத்தின் குரு
சாத்வீக மனது
சாமனிய தவம்
ஏமாற்ற வலி
வள்ளுவ சிலை
காதலின் தோல்வி
நிகழ்கால ரௌத்ரம்
வறுமையின் உருவம்
கவிஞனின் அடையாளமென
அலங்கரிக்கப்படுகிறது
முகத்தில் தாடியாய்!

- இரா.ச.இமலாதித்தன்

நான் அவள் காதல்!
-001-

நமக்குள்ளான கூடலை பற்றி
கிறுக்க தொடங்கும்போது
எழுத்துகள் ஊடல் கொள்வதால்
பற்றில்லாமல் நிற்கிறது
தமிழ் மீதான காதல்!

-002-

நான் அவள்
மூன்றாவதாய்
அது
தனித்து நின்று
எங்கள் இருவரையும்
தனிமை படுத்தியது
தயக்கம்!

-003-

தமிழுக்கும் உனக்கும்
ஒரே ஒற்றுமை;
அறிய முடியவில்லை
சரியான வயதை!

-004-
 

நட்பு காதல்
எந்த ஒன்றை
பிடிக்குமென்றாய்
பதிலாக உன்னையென்றேன்!

-005-

உன் சிரிப்பு,கோபம், 

அழுகைக்கெல்லாம் 
அப்படியே மறுமொழிந்தேன்;
நீ வெட்கப் படுகிறாய்
பதிலாக
வேடிக்கை மட்டுமே
பார்க்க முடிகிறது!

-006-

முதல் நிகழ்வு
மீண்டும் நிகழ்வதில்லை
மீண்ட காதலில்!


- இரா.ச.இமலாதித்தன்

கனவுக்குள் மழை!
மண்ணை பழித்துக் கொண்டிருந்தது
மேகக்குழுமம்...
விண்ணை சூழ்ந்த வெள்ளை மின்னலால்
கிழித்தெறியப்படுகிறது வானம்;
ஆழ்ந்த இருளின் உயிர்முடிச்சும்
சற்றுநேரம் அவிழ்க்கப்படுகின்றது;
மீண்டுமிந்த இருள்சூழல்
தன் ஆளுமையை செலுத்திவிட
நீண்டுக்கொண்டிருக்கிறது;
வறண்ட வெளியினுள்
சின்னப்புன்னகையாய்
விழுந்த வெளிச்சம்
இன்னுமிங்கே சுகமாய்
நீந்திக்கொண்டிருக்க
கமழும் வாசனையை தவழவிட்டு
மருத மண்ணும்
தாலாட்டு பாடிக்கொண்டிருக்கிறது;
கோடைக்கால மழைப்போல
சிறு தூறலில் தொடங்கி
உச்சத்தையும் தொட்டுவிடும் நேரம்
மூடப்பட்ட கண்களின் வழியே
கனவுக்குள்ளிருந்து மீளப்பட்டு
நிகழ்வுகளும் களையப்படுகிறது!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

பைரவ பயம்!அதி காலை நேரம்
சிவன் கோயிலுக்குள்
கல்லாய் காட்சி தந்ததை
கரம்கூப்பி வணங்கியபோது
பக்தியால் பெருக்கெடுத்தவொன்றும்...
அந்தி மாலை நேரம்
சிவன்கோயில் தெருவோரம்
கல்லெடுத்து விரட்டும்போது
பயத்தினால் உருவெடுத்தவொன்றும்...
ஒன்றோடொன்றாய் மற்றொன்றோடு
என் மனதுக்குள் ஒருங்கிணைந்து
உள்ளேயும் வெளியேயும்
முரண்பாடாய் நின்றிருந்தது
நாயும் பைரவனுமாய்!

- இரா.ச.இமலாதித்தன்