தோளோடு பேசும் காதல்!


-01-

தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!

-02-

வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலைத்தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!

-03-

உன் தீண்டல் கலந்த
காற்றை சுவாசித்து கொண்டே,
உன் தோளில் சாய்ந்து மெல்ல தொலைகிறேன்;
சொர்க்கத்தின் வாயிற்கதவு
தானாய் திறக்கிறது, நீ என் தேவதை!

-04-

வாழ்நாளெல்லாம் உன்னோடு பயணிக்க போகும்
அந்த மகிழ்வான நாட்களுக்காகவே
கடுந்தவமிருந்து கொண்டிருக்கின்றன
என் நாட்காட்டியின் ஒவ்வொரு பக்கங்களும்!

-05-

உனக்காகவே
என் வாழ்வின் பயணப் பாதைகளை
புத்தம்புதிதாய் உருவாக்கி கொண்டிருக்கிறேன்;
இனி வழிகாட்டியாய்
என்னோடு பயணிக்க
ஆயத்தமாய் இரு என்னுயிரே!

- இரா.ச.இமலாதித்தன்