நிழலும் நீயே!




ஆளரவமற்ற மதியநேர பயணத்தின்
அரங்கேறிய ஆகாய மார்க்க
ஆதித்த தாண்டவத்தில்
அல்லல் பட்டுக்கொண்டே
அவசரகதியில் கால்களிரண்டும்
நகர்ந்து கொண்டிருக்க;
நீண்ட நெடுந்தொலைவில்
என் தாயைப்போல் ஒருத்தி
என்னை இளைப்பாற்றி அரவணைக்க
அழைப்பு விடுக்கிறாள்
ஒற்றைக்காலோடு
நிழல் தரும் மரமாய்!

- இரா.ச.இமலாதித்தன்

விழிகளில் ஒரு கனவு!




உணர்வற்ற நடுநிசி தருணங்களிலும்
அதிகாலை முனகல்களிலும்
என்னை நானே வெற்றிக்கொள்ள;
எனக்காகவே போரிட்டுக் கொள்வதும்
என்னையே நானே போரிட்டுக் கொல்வதும்
உணர்வற்ற காட்சிப்பதிவுகளாய் அரங்கேற;
நான் நானாகவே நாயகனாக
புத்தம்புது அவதாரமாய் உருவெடுத்து
என்னால் என்னையே எதிராளியாக வீழ்த்தப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
எதிர்ப்படும் நிகழ்வுகள் அனைத்தும்
காட்சிப்படுத்தி பதிவாக்கப்படும்போது
அந்தரங்க சாட்சியங்கள் யாவும்
பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறியுமோயென்ற
அச்சத்தோடே அரங்கேறிக்கொண்டிருக்கிறது
விழிகளுக்குள்ளே கனவும்!

- இரா.ச.இமலாதித்தன்