நீயொரு பகுத்தறிவாதியா?

 
கடவுளில்லையென்றாய்
புதிய பாதை இதுதானென்றாய்
பின்னொருநாள் மதம் பிடிக்காதென்றாய்
சாதியத்தை எதிர்த்தாய்
சடங்குகளை குறைச்சொன்னாய்
இந்து மதத்தை மட்டும் உமிழ்ந்து பேசி
கரவொலி வாங்கினாய்!

கண்டதையெல்லாம் பேசித்தீர்த்தாய்
காணாததையும் கண்டேனென்றாய்   
தானொரு பகுத்தறிவாதியென்றாய்
மதமும்,கடவுளும் பொய்யென்று
மேடைகளில் பரப்புரை பலசெய்தாய்!
 
பிரிவினையில்லாத மதமே இங்கில்லை
என்பதை அறிய மறுத்து அறிவிலியாய்...
வேறெந்த மதங்களையும் எதிர்க்க
திராணியில்லாத வாய்ச்சொல் வீரனாய்... 
தான்சார்ந்த இந்து மதத்தை மட்டுமே குறைக்கூறி
கூச்சலிட்டு குதூகலம் அடையும் 
குறுகிய புத்தியையும் வளர்த்துக்கொண்டாய்!

உன்னருகில் கடந்து போகும் தாசியை
பத்தினியென்று கண்மூடி கிடந்தாய்
உன்னை ஈன்றெடுத்தவள் புறக்கணித்ததால்
தன் தாயின் கற்பின் மீதே களங்கம் பேசி
மேடைகளில் தாசியென்று முழங்கினாய்!

சிலை வழிபாட்டை எதிர்த்தவனுக்கே
காக்கைகள் எச்சமிட
தெருவுக்கொரு சிலை வைத்து
அந்த தலைவனையே கடவுளாக்கிய
போலி பகுத்தறிவியாதிகளின்
இதுபோன்ற மூடச் செயல்களைக்கண்டு
புல்லரித்து புளங்காகிதம்
அடைகிறேன்!

பகுத்தறிவாதியென்ற போர்வையில்
உம் அறியாமையை நினைத்து
குழம்பி நிற்கிறேன் நான்... 

இப்போதாவது சொல்
உண்மையில் நீயொரு பகுத்தறிவாதியா...?            - இரா.ச.இமலாதித்தன்

_

அன்பே சிவம்!தலையில் தேங்காய் உடைப்பதையும்
பச்சிளம் குழந்தையை நெஞ்சினில் மிதிப்பதையும்
பார்த்து பக்தி பரவசமடையும் பாவப்பட்ட மனிதா- நீ
ஆண்டவனை திருப்தி படுத்துகிறேனென்று - போலி
ஆன்மீகத்தில் அடிமைப்பட்டு கிடக்கின்றாய்!
வாயிலிருந்து லிங்கம் எடுத்தவனையெல்லாம்
சிவனோடு ஒப்பிட்டு பழகிவிட்டாய்
மாயம் செய்யும் மந்திரவாதியெல்லாம்
ஞானம் தெளிந்த ஆன்மீகவாதியாய்
வேடம் போடும் நாட்டுக்குள்ளே - அவனை
வீணாய் நம்பி மதிகெட்டு நிற்கின்றாய்!
காவி உடுத்தியவனெல்லாம் உனக்கு
கடவுளாக தெரிந்து தொலைக்கிறானோ
உனக்குள்ளேயே எல்லாமும் இருப்பதை மறந்து
எவனோவொருவனின் காலை வருடுகிறாய்
மூளை உள்ளவன் தானே நீ
மூடநம்பிக்கையில் ஏன் முடங்கிக் கிடக்கிறாய்?
கடவுளென்று ஒன்றே இல்லையென்று
சொல்லி திரியும் கூட்டமும் கூட
இல்லாத இறைவன் இங்கே இருந்தால்
நல்லதென்றே சொல்கிறோமென்று
உரைக்கும் காலமிங்கே கனிந்து கொண்டிருக்க - நீ
கண்கட்டு வித்தைகளுக்கெல்லாம் விலைபோனால்
ஏமாற்றப்படுவதுதான் உனக்கான விதிப்பலன்!
பசியென்று கையேந்திவரும் வயோதிக கிழவனுக்கும்
உன்னைத்தேடிவரும் தகுதியுள்ள ஓர் இளைஞனுக்கும்
உதவி செய்ய மறுக்கும் மனவூனமுள்ள நீ
கோவிலின் உண்டியலில் கோடிக்கணக்கில் பணமும்
எடைக்கு எடை தங்கமும் தந்தென்ன லாபம்?
இறைவனை தேடி அலையும் உன் நெஞ்சுக்குள்
அன்பென்ற ஈரம் வறண்டு போய்விட்டதே - நீ
கோவில் குளங்கள் எங்கெங்கு சுற்றினாலும்
அன்பே சிவனென்று அறியாத வரை
போலி ஆசாமிகளால் முடக்கப்படுவாய்
பலவீனமான பக்தனாய்!

- இரா.ச.இமலாதித்தன்

பெண்ணொருத்தி!

(நான் ஆணாதிக்கவாதியென்ற மனப்பான்மையில் இருந்தாலும் வேலுநாச்சியார் போன்ற வீரமிக்க பெண்களையும் நினைவுபடுத்திக்கொண்டு இந்த மகளிர் தினத்தில் என்னுடைய ஒரு வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்.)

இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

ஆண்மகனாய் அவதாரமெடுக்க
தன்னுயிரை ஈந்து பிறப்பெடுக்கச் செய்து
எனக்கோர் புத்துயிர் கொடுத்தாள்
தாயாய் ஒருத்தி!
பள்ளிச்சென்ற பால்ய வயதில்
அடித்தும் அரவணைத்தும்
பாடம் புகட்டி வளர்தெடுத்தாள்
ஆசிரியையாய் ஒருத்தி!
கல்லூரி காலங்களில் கதைகள் பல பேசி
வகுப்புக்கு உள்ளும் வெளியும்
நட்போடு உடனிருந்தாள்
தோழியாய் ஒருத்தி!
வெளியூர் வந்து வேலைசெய்து
பிழைப்பை நடத்திய காலங்களிலும்
உடன்பணி புரிந்து என்னை ஆக்கிரமித்தாள்
காதலியாய் ஒருத்தி!
திருமணத்தால் கரம்பிடித்து
என் வாழ்க்கைக்குள் உட்புகுந்து

புதுப்பயணத்தை தொடக்கிவைத்தாள்
மனைவியாய் ஒருத்தி!
தந்தையென பதவிஉயர்வு கொடுத்து
என்னை பெருமித படுத்தி
பேரானந்தத்தையும் கொடுத்தாள்
மகளாய் ஒருத்தி!

- இரா.ச.இமலாதித்தன் 

சமூகவியல்!

 


01.
ஆங்கில பள்ளியை 

தேடி அலைந்தான் 
தன் மகள் தமிழ்செல்வி பாடம் கற்க!


02.

குடியிருக்க வீடில்லை
கூலித்தொழிலாளியாய்
கொத்தனார்!03.

தீப்பெட்டி தொழிற்சாலையில்
சிறுவன் கண் கசக்க
மத்தாப்பூ சிரிக்கிறது!

04.


செதுக்கியவன் தொழிலாளி
திருடியவன் முதலாளி
சிலையாய் கடவுள்! - இரா.ச.இமலாதித்தன்

_

காதலால்!


 

01.

உன் இமைகளின் 
கதவை திற
எனக்கான 

காதல் குடியேறலாம்!


02.

கொடுத்தும் வாங்கியும்
கடன்பட்டே நிற்கிறேன்
உன்னிடம் என் காதல்!

03.


கானல் நீராகியது

பிரிவின் கண்ணீர்
 

காட்சிப்பிழையாய்
உன் வருகை! 


04.


உன் இருவிழி பார்க்கும் போது
முற்றிலும் துறக்க முடிவு செய்த
இந்த முனிவனின் தவம்
கனவாகி போனது!
05.

ஆயிரக்கணக்கான ஆசைகளை
உனக்காக சேமிக்கிறேன்
ஒவ்வொரு கவிதைகளிலும்!

06.


நாட்காட்டியில் ஒவ்வொரு தேதி 

கிழிக்கும்போதும்  
உன்னை சந்தித்த நாளே 

வந்து மறைகிறது
உன்காதலைப் போலவே!

07.

என் முகம் பார்க்கையில்
உன் முத்தத்தின் சுவடுகளை
ஞாபப்படுதுகிறது கண்ணாடி!


-இரா.
ச.இமலாதித்தன்

ஆன்மிகத்தொழில்!


தனக்கென புதுப்பெயரை தன்வசப்படுத்தி
பெயரின் முன்னும் பின்னும்
படித்து வாங்கிய பட்டம்போல - தனக்குதானே
அடைமொழியிட்டு அரசியல்வாதியாய்
ஆகிபோனான் ஆன்மிகவாதியென்று!
முகம் சிரம் முழுதும் முடியை வளர்த்து
தன்னைத்தானே முனிவனென்று
திரிந்திடும் கும்பல் அதிகமாகி போனப்பின்னே
ஆச்சாரமாய் ஆசிரமம் தொடங்கி
விபச்சாரம் நடத்தினான் விபூதி திலகமிட்டு!
சொற்பொழிவை உலகெங்கும் நடத்தி
செல்வ செழிப்பாய் வாழ்க்கை நகர்த்தி
காவி உடையை களங்கப்படுத்தும்
காம இச்சை தீராதவனெல்லாம்
தீர்க்கத்தர்சியனான் பக்தனால்!


தானே இறைவனென்று சுயபுகழ் தேடி
அருளைக்கொடுத்து பிரம்மனானவன்
பின்னொருநாள் சங்கடப்படப்போவது தெரியாமலேயே
படுக்கையை பகிர்ந்தான் நடிகைகளோடு
பிரம்மச்சாரியென்ற பகல்வேசமிட்டு!
கடவுள் பெயரால் செல்வம் சேர்க்கும்
கயவர்க்கூட்டம் நிரம்பிவழியும் நெரிசலிடையே
கண்டவனெல்லாம் கடவுளைக் கண்டேனென்று
தம்பட்டம் அடித்து பணம்கொழிக்கின்ற
வியாபார மையமானது ஆன்மிகத்தொழில்!

- இரா.ச.இமலாதித்தன்