திறந்த வானமாய் மூடிய போர்வைக்குள்ளே பொத்தல் விழுந்த சின்னஞ்சிறு ஒளிகீற்றுகளாய் நட்சத்திர கூட்டங்களும்... பெரு வட்டமிட்ட ஒளிப்பந்தாய் நான் போகிற போக்கெல்லாம் என் பின்னாலே சுற்றி திரிந்த ஒற்றை நிலவையும்... ஓரிரு நட்சத்திரங்கள் நகர்வது ஏனென்று புரியாமல் அசைவுகளால் ஆராய்ச்சி செய்து விமானமென்று கண்டறிந்ததையும்... மல்லார்ந்து படுத்துறங்க கண்ணசரும் நேரம்வரை மின்மினி பூச்சிகளையும் ரசித்து கிடந்த முன்னிரவு நேரங்களையும்...
தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது;
சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது;
இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல் கலங்கி நிற்கிறது கண்கள்;
பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்!
குடும்பச்சுமை ஏதுமில்லா குதூகல கும்மிகளுக்கு நடுவே வீட்டிற்க்குள் குறுக்கே வந்த கடன்சுமையை சுமக்க முடியாமல் தவித்திருந்த என் தந்தையின் தோளுக்கு துணை சேர்க்கும் கிளையாய் என் மனதில் ஆழமாய் ஆலம்விழுதுகள் துளிர்விட ஆரம்பித்தது வேலைக்கு சென்றிடவேண்டுமென்று! ஊருவிட்டு ஊருவந்து ஞாயிறு தினசரிகளை பக்கம்பக்கமாய் கட்டம்கட்டிய விளம்பரங்களை வேலைத்தேடி தவித்தபோது... வேலையேதுமில்லாமல் விளையாட்டாய் சுற்றி திரிந்து வீணாக பலபொழுதை கழித்து வீராப்பாய் சட்டை தூக்கி வீதியெங்கும் அலைந்த அந்நாட்களில் நான் அறிவேனா ஒவ்வொரு அலுவலகமாய் படியேறி இப்படி அலைகழிக்க படுவேனென! எப்படியோ ஒருவழியாய் போதுமென்ற மனநிறைவோடு இன்றைய வாழ்க்கை தந்த இந்தவேலையும் முட்டிமோதி கிடைத்த போது... பார்ப்பவன் யாராகினும் படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சே வேலைக்கு போகலையா? யென்று நையாண்டி செய்தாலும் நாசுக்காய் சிரித்து மழுப்பி நழுவிச்சென்ற அந்நாட்களில் நான் அறிவேனா இவ்வாழ்க்கையும் என்னைவிட்டு விலகிச்சென்றதை!