யாரோ அவன்!

















நாகரிக உடையணிந்து   
கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே 
உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்
பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு
ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை
குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்
ஒருவேளை உணவுக்காகவோ 
இல்லை வேறு எதுக்காகவோ
வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்; 
இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்
அவனது அவமானங்களை 
யாரும் அனுபவப்பூர்வமாய் 
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை நான் உள்பட;

மாணவன், தொழிலாளி, வியாபாரியென  
பன்முக அடையாளங்களில்  
கைகளில் கைக்குட்டைகளோடு 
முதலாளியாகத் தென்பட்டுக் கொண்டிருந்தான்;
நானுமொரு கைக்குட்டையை 
அவனிடம் வாங்கிக்கொண்டிருந்தேன்;
யாரோ என்னை ஏளனமாய்ப் பார்ப்பதுபோல் பிரம்மை
நான் மட்டும்தான் அவன் சொன்னவிலைக்கே
வாங்கி இருக்கிறேன் போல;
பேரம் பேசுவது சுலபமாகவும்
சிலசமயங்களில் சுகமாகவும் கூட இருக்கிறது;
குளிரூட்டப்பட்ட கடைகளில் 
வாயையே திறக்காமல் பர்சை திறக்கும் கூட்டம்  
இவனைப்போன்ற பாமரர்களிடம் மட்டும் 
பேரம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது;
உள்ளுக்குள் கோபத்தோடும் 
உதடுகளில் சிரிப்போடும் 
அவனிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன்
நாமும் பேரம் பேசி இருக்கலாமோ யென்ற
எண்ண வோட்டங்களோடு!

 - இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

1 கருத்து:

கருத்துரையிடுக