மெல்லிய புன்னகையில்!

-01-

உன் மூச்சுக்காற்று கலந்த அரவணைப்பில்
எனக்கான ஓர் உலகம் சுழலத்தொடங்கி
உன்னுள் அடங்கும்;
இனி நமக்கான இந்த பிரபஞ்சமே
சிறுதுளியாய் மாறிப்போகும்!

-02-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-03-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் 
அருகருகே உரசாமலேயே 
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

-04-

உன் கண்ணிசைவுகளுக்காக காத்திருக்கும்
என் உயிர் மொத்தமும்,
நீ உதிர்க்கும் மெல்லிய புன்னகையால்
ஆயிரம் ஒளியாண்டை
ஒருநொடியில் கடந்து விடுகிறது!

-05-

தனித்தனியான நான் என்பதே
நம்முள் இருப்பதாய்
எனக்கு இதுவரை நினைவிலில்லை;
என்னைவிட உன்னையே
நானாக நினைத்திருக்கிறேன்.
நீ வேறு யாரோயல்ல;
நான் தான்!

- இரா.ச.இமலாதித்தன்