கிறுக்கல்கள் - 134

அது அவளா?

அலைபேசியில் சேமிக்கப்படாத
புத்தம்புதிய எண்ணிலிருந்து
அழைப்பு வரும்போதெல்லாம்
அது அவளாக இருக்குமோயென்ற
ஆர்வம் மட்டுமே விடாமல்
ஒவ்வொரு முறையும்
தொற்றிக்கொள்கிறது...
மிச்சமிருப்பது என்னவோ
வழக்கம்போல
ஏமாற்றமும் ஏக்கமும்தான்!

- இரா.ச.இமலாதித்தன்

கிறுக்கல்கள் - 133

இலக்கியவாதி

இணையங்கள் போர் தொடுத்ததால்
இலக்கியங்கள் தோற்கடிக்கப்பட்டன
தினமொரு எழுத்தாளன்
புத்தம்புதியதாய் உருவெடுத்தான்
எனக்கென்ன என்பதுபோல்
விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தான்
புளங்காகிதம் அடைந்தவனாய்
அனைத்தையும் விவரித்து கொண்டிருந்தான்
புரியாத விசயங்களையெல்லாம்
தீர ஆய்வறிந்து கிறுக்கலானான்
நவீனத்து இலக்கிய உலகம்
இவனாலாயே புனரமைக்கப்பட்டது
இனி இவன் எழுதுவதுதான்
இலக்கியமென நிர்ணயிக்கப்பட்டது!

- இரா.ச.இமலாதித்தன்

கிறுக்கல்கள் - 132கனவெல்லாம் நீ

நீ கழுத்தை சாய்த்துதான்
நடப்பாய் என்பதை கூட
இன்னொருவன் சொல்லித்தான்
நினைவிலேற்றி கொள்ளமுடிந்தது;
உன் வளைந்த கூந்தலை கூட
யாரோ அடையாளம் சொல்லிய பின்பே
அடையாளப்படுத்தி கொள்ள முடிந்தது;.
இப்படியே இன்னும் என்னென்ன
தெரிந்து கொள்ளபோகிறேனென்று
சரியாக தெரியவில்லை;
ஆனால் எதையுமே
உன்னிடம் சொல்லமுடியவில்லை யென்ற
ஏமாற்றத்தோடே
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்;
விடியல் தினமும் எனக்காகவே காத்திருக்கிறது
நான் தான் இன்னமும் விழிக்கவில்லை
கனவெல்லாம் நீ!

- இரா.ச.இமலாதித்தன்

கிறுக்கல்கள் - 131

எனக்காக ஒரு
கவிதைச் சொல்லென்று
நச்சரிப்பாள்;
அவள் உதடு வழி
கசியும் சொற்களையே
கலவையாக்கி
கவிநயத்தோடு சொல்வேன்;
அற்புதமென்பாள்
சிரித்துக்கொள்வேன்
அவளை நினைத்து
கூடவே
தமிழை நினைத்தும்!

- இரா.ச.இமலாதித்தன்

கிறுக்கல்கள் -130
இறுகி கொண்டிருக்கிறது நூல்
விலகி கொள்ளாத ஆரம்
இறுதி பிடியை எதிர்பார்த்து
சின்னஞ்சிறு வட்டமிடுகிறது;
சுற்று மட்டுமே நீள்கிறது
தளர்வில் இளகிக்கொள்ள
சுயமாகவே ஆயத்தமாகிறது;
முடிவில் அறுத்தெறிய படலாம்
இலகுவாக விலகுவது
எப்போதும் இயல்பு தானே!

- இரா.ச.இமலாதித்தன்