எனக்கொன்றும் தெரியாது!திருவிழாக்கால நெரிசல்களில்
நான் தரிசிக்க முடியாத நம் குலசாமியை
நீ தவழ்ந்து நடந்த
பால்ய வயது பருவக்காலங்களில்
என் தோள்மீது உன்னை சுமந்து
உன் கண்கள் வழியாக
வழிபட்ட போதும்

எனக்கொன்றும் தெரியாது!

பள்ளி சென்று திரும்பாத
மாலைப்பொழுதுகளில்
படபடப்போடு
உன்னை வாரியணைத்து
உனக்கான வீட்டுப்பாடங்களை
நான் முடித்து கொடுத்து
உன் அச்சத்தையும்
கண்ணீர் துளிகளையும்
துடைத்தெறிந்த போதும்

எனக்கொன்றும் தெரியாது!

உன் கல்லூரிக்கால கட்டணங்களை
அக்கம்பக்கம் அலைந்துதேய்ந்து
வட்டிக்கு கடன்பட்டு
கடைசி நாளில்
கல்லூரி அலுவலர்களின்
வசைச்சொல்லை வாங்கிக்கொண்டு
உனக்கான பணத்தை செலுத்தியபோது
முகத்தை மட்டும் சிரிக்க
பழகிக்கொண்ட போதும்
எனக்கொன்றும் தெரியாது!

வருடங்கள் கடந்த பின்னே
நீயே பின்பொரு நாள்
இதை என்னிடமே சொல்லிவிட்டு
ஏளனம் செய்வாய் என்பதை பற்றி
இப்போதுதான் உணர்கிறேன்
எனக்கொன்றும் தெரியாது!

- இரா.ச.இமலாதித்தன்