காதல் சூழ் உலகு!-01-

என் மனமெனும் இந்த பிரபஞ்சத்திற்குள்
வெடித்து சிதறும் பெரும்பிரளயத்தால்
உருவாகும் புத்தம்புது கிரகத்திலெல்லாம்
நீயே காதல்சூழ ஆட்சி செய்கிறாய்!

-02-

நீ அருகில் இருக்கும்
சின்னஞ்சிறு நொடிகளெல்லாம்
பல மணி நேரமாக நீண்டுவிடாதாயென
ஏங்கி கிடக்கும் இந்த கடிகார முட்களின்
தவத்தை கலைத்துவிடாமல்
இன்னும் கொஞ்சம் நேரம் என்னோடு இரு!

-03-

கடந்த காலமெல்லாம்
காலாவதியான நாட்காட்டியில்,
உன் நினைவுகள் மட்டுமே
கிழிக்கப்படாமலே கிடக்கிறது;
வருங்காலமெல்லாம் நீயாகி போனாய்
என் வருங்காலமே!

- 04-

நேற்றை தொலைத்த இன்று போலவே,
நான் என்பதும்
உன்னுள் தொலைந்து கொண்டிருக்கிறது;
நீ இருக்கிறாய்
உன்னுள் நானும் இருக்கிறேன்;
தொலைந்த என்னை மீட்காதே!

-05-

என் இதயத்தை
உன் இதழ்வழி வார்த்தைகளால்
கிழித்தெறிந்தாய்;
உன் புறக்கணிப்புக்கான
என் சோகங்களையெல்லாம்
என்னுள்ளேயே
சேகரித்து வைத்திருக்கிறேன்;
நாளை உனக்கான நிழலை
இதய கூரையில் தருவேன்;
என் இறுதி நாளுக்கான ஓலையை
இன்றே குறித்துக்கொள்;
நான் உன்னால் இறக்க நேரிட்டாலும்,
உன்னுள் வாழ்வதற்காகவே
பிரத்தனை செய்வேன்
என்னுடலை உடைத்து!

- இரா.ச.இமலாதித்தன்