புலித்தமிழா!

மாவீரர் தின வாழ்த்துகள்...!


உயிராயுதமாய்
வில்லோடு அம்பாய்
வீறுக்கொண்டுச் சென்று
வீரத்தை விதைத்து
சோழர் கொடியை
திக்கட்டும் பறக்கசெய்த
வெற்றிப்படையின் வேந்தனே!
ஓயாத அலைகளாய்
நம்தமிழ் புகழ்விதை தூவி
கரும்புலியாய் களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாய்
எத்தனை காலம்கடந்தும் - என்
தமிழினம் காத்த கடவுளாய்
உன்னை நான் கண்டிருப்பேன்!

கடற்புலியாய் கடலுக்குள்ளே
கப்பலையே கவிழ்த்துவந்து
கயவனையும் கலங்கடித்தாய்.
மச்சவதாரமே உனக்கென்றும் மரணமில்லை
அதை மறக்க எனக்கும் மனமில்லை!
வான் புலியாய் வான்தேடி வட்டமிட்டு
போராளி இயக்கங்களின் பேரொளியாய்
முன்னோடி தமிழனென
வானோடி வலம்வந்து 

வான்புகழை வெளிக் கொணர்ந்தாய்!

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை...
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்
தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை!

ஈழத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்
மண்ணோடு மடிந்துவிட
வெறும் எலும்பும் சதையுமான
வெற்றுடலில்லையே...
குருதியால் மண்ணில் குளித்து
நரம்புகளால் வேராகி
எலும்புகளால் கிளையாக
விருட்சமாய் நிச்சயம் வெளிவரும்
சுததந்திர ஈழத்தின்
விடுதலை காற்றை சுவாசிக்க!

நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் - அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்!

நிழலும் வெளிச்சமாகும்போது
இருளைக்கூட தேடித்தான்
பார்க்க நேரிடும்...
எங்கள் வாழ்வும் நிஜமாய்
மாறும்வேலையில்
நிர்கதியான நிலைமாறி
நிம்மதியாய் நித்திரை கொள்வோம்!
பகைவென்று
சுதந்திரகாற்றை சுவாசிக்க
சிறைவென்று சீற்றத்தோடு
பழிதீர்த்து நமக்கான வழிகாண
சபதமேற்போம் இந்நாளில்!

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுதந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!

- இரா.ச.இமலாதித்தன்