ஆளப்பிறந்தோம்!
கண்டவனெல்லாம் 
பேண்டுவிட்டு போக
இம்மண் என்ன 
பொதுக்கழிப்பறையா?
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டபரம்பரை போதையேற்றி
எங்களுக்குள் பகையை மூட்டி
குருதிக்காட்டில் சதைகள் தின்று
ஏப்பம் விட்டது போதும்;
விபச்சாரக்கூடம் போல
நீயும் எத்தனை காலம் தான்
எங்கள் மீதேறி அனுபவிப்பாய்?
எம் மொழி தெரியாத ஆண்டவன் 
இனி இங்கே தேவையேயில்லை;
கூத்தாடிகளின் கூடாரமென
மாறிப்போன அரசை அகற்றி
நாங்களே ஆண்டு கொள்கிறோம்;
தமிழ்க்கடலோரம் 
நாள்தோறும் அரங்கேறும் 
மரண ஓலங்களின் அலறலை மறந்து
காலம் பார்த்து காய் நகர்த்தும்
காலாவதியான காளான்களெல்லாம் 
மிதிபடாமல் ஒதுங்கியே இருங்கள்;
நாகம் கொல்லும் கருடன் போல
நாங்களிலிருக்கிறோம்;
ஆம், இது செந்தமிழர் மண்
ஆள நாங்களிலிருக்கிறோம்!

- இரா.ச. இமலாதித்தன்

ரகசியம்!
உள்ளுணர்வுகளை 
ஆழமாக உணர்கிறேன்; 
ஆழ்மனதோடும் 
அடைக்கலமாகிறேன்;
பிரபஞ்சத்தையே 
தழுவிக்கொள்கிறேன்;
வெட்டவெளிக்குள்
இருளுமில்லை; 
வெளிச்சமுமில்லை;
காலமென்ற மாயையை
கனப்பொழுதில் கடக்கிறேன்;
கனவும் நிழலும் இணையும் 
மூன்றாம் புள்ளியில் 
ஒன்றாய் குவிகிறேன்;
எண்ணங்களின் முடிவிலி அறிய
என்னுள் நுழைகிறேன்;
திமிரியெழும் 
இரு கொம்புகள் உடைக்கிறேன்;
ரகசியங்களின் சிறகுகளை விரித்து
மேலே பறக்கிறேன்; 
இரு கண்களுக்கிடையே 
சிக்கிய குறிக்குள் விழுந்து 
உன்னை அறிகிறேன்;
கருப்பும் சிவப்பும் ஒன்றென 
உண்மை தெரிகிறேன்;
எண் போல
நீ
இதுவரையிலும்
என் போல
வரையறுக்கப்படவே இல்லை!

- இரா.ச. இமலாதித்தன்

இது நீங்கள் நினைக்கும் அதுவல்ல!பொதுவாக இப்போதெல்லாம்
அதிகமாய் சிரிப்பதில்லை,
மெல்லச்சிமிட்டி என்னை நீ கடக்கும்
அந்த சின்னஞ்சிறு விழிகளுக்குள்
கடந்தகால துன்பவியல் சம்பங்களில்
தொலைத்த புன்னகையை மீட்கிறேன்;
பேரிருளில் வியாபித்திருக்கும்
நட்சத்திரக்கூட்டங்கள் போல
விரவிகிடக்கும் உன் கூந்தல் வானில்
கயல்கள் நீந்தி கொண்டிருக்க,
இமைகளென்ற என் வலைகளுக்குள்
கட்டியிழுக்காமலேயே
அவையெல்லாம் துள்ளி விழுகின்றன;
இங்கு வசமாய் மாட்டியது வலைதானென
புரிந்து கொண்ட பின்னாலும்
நீ அனுதாப படாமல் வெட்கப்படுகிறாய்,
அன்புக்குள் சிக்கிக்கொண்டதை பார்த்து
ஏளனமாய் உதட்டோரமும் சிரிக்கிறாய்,
உன் ஒழுங்கற்ற பற்வரிசையும் கூட
தனித்த பேரழகு தான்;
மெல்லிய நடை போடும் தரிசனத்தை
மெதுமெதுவாய்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
என்னை தொலைத்து உன்னுள்;
நிச்சயமாய்
இது நீங்கள் நினைக்கும் அதுவல்ல!

- இரா.ச. இமலாதித்தன்

சினம் கொள்!கோமாளிகளால் ஆளப்படும்
பயங்கரவாத அரசுகளால்
கொல்லப்பட்ட அனிதா
யாரோ ஒருத்தியல்ல;
நாளை உங்கள் வீட்டிலும்
யாரோ ஒருத்தி
அனிதாவாக மாறக்கூடும்;
ப்ளூவேல் மட்டுமல்ல,
நீட்டும் கூட
தற்கொலை செய்ய வைக்கும்
வெறியர்களின் விளையாட்டு தான்;
இனியும் தாமதம் ஏன்?
தமிழா,
அறம் காக்க சினம் கொள்!

- இரா.ச.இமலாதித்தன்

கல்வி!
வறட்டு கெளரவத்திற்காகவும்,
ஊர் பெருமைக்காவும்,
சுய தம்பட்டத்திற்காகவும்,
எத்தனையோ ஆயிரங்களை செலவழித்து
மெட்ரிக்குலேசன் கான்வென்ட் பள்ளிகளில்
எல்.கே.ஜி. என்ற மூன்றெழுத்தை படிக்க வைக்க
முண்டியடித்து சேர்க்க துடிக்கும்
முட்டாள்களின் பிள்ளைகளை மட்டும்
அறிவாளியாக்கி விடுவார்களா,
பொழுதுபோக்குக்காக
வெறும் சில ஆயிரம்ரூபாய் சம்பளம் வாங்கும்
அரைகுறையாக டிகிரி முடித்த மிஸ்கள்?
பாவம் அந்த பிஞ்சுகள்
காலம் முழுக்க நம்மை போல
குடும்ப பாரம் சுமக்க கூடும்;
இந்த மூன்று வருட பால்யத்தையாவது
அவர்களுக்காக அனுபவிக்க விடுங்கள்
சுமைகள் மறந்து சுகமாய் கொஞ்சம்
வாழ்ந்து பார்க்கட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

விதைகளெல்லாம் விருட்சமாகும்!முப்படைகளோடு களமாடியும்
முதுகோரம் துரோகத்தின் உச்சம்;
எதிரேழு நாடுகளின் சூழ்ச்சியால்
முடக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்;
இனவழிப்பின் அடையாளமாய்
இங்கே நினைவு முற்றம்;
மெளனித்திருக்கும் ஆயுதங்களால்
உளவியல் தாக்குதலில்
வற்றி போனது நந்திக்கடல்;
காரிருளில் நட்சத்திரங்களாக
கரும்புலிகளின் காட்சிகளுக்கிடையே
நிச்சயமொரு நாள்
விதைகளெல்லாம் விழித்தெழுந்து
திரிகோணமலையெங்கும்
விருட்சங்களாக வளர்ந்து நிற்கும்!

- இரா.ச. இமலாதித்தன்


(எங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி!)

நானும் நீ!
இத்தனை வருடங்களில்
எத்தனை முறை இதே தேதியை
கிழித்தேனென தெரியவில்லை;
பனிரெண்டு எண்களுக்குள்ளான
நெடுந்தூர ஓட்டக்களத்தில்
ஆரம்பித்த இடம் தெரியாமல்
ஆரம் போல சுற்றிக்கொண்டிருக்கும்
கடிகார முட்களோடு முட்டி மோதி
கோடிக்கணக்கான நாழிகைகளை
என்னுள் விழுங்கிருக்கிறேன்;
இரவும் பகலும் கடந்த
ஒவ்வொரு பொழுதுகளிலும்
ஏதோவொரு கனவுகளோடு
எதையெதையோ தொடர்பு படுத்தி
என்னையே தொலைத்திருக்கிறேன்;
வரையறையற்ற காலமெனும்
நிர்ணயிக்க முடியாத மாயைக்குள்
நிரந்தரமில்லாத இவ்வாழ்க்கைக்காக
யாராகவோ தான் உருமாறி கிடக்கிறேன்;
இவையெல்லாம் நிச்சயம் நானல்ல
முடிவிலியான காலம்
இன்று நானாக இருக்கிறது;
நேற்றோ நாளையோ
நீங்களாக கூட இருக்கலாம்!

- இரா.ச. இமலாதித்தன்

அவனும் நானும்!


உயிரற்றதாக வரையறுக்கப்பட்ட

எல்லாவற்றிற்குள்ளும்
ஓர் உயிரை உணர்ந்த பின்னால்
ரத்தமும் சதையுமான
துர்நாற்றமடிக்கும் இவ்வுடலிலுள்ள வாலை 
எப்போது தொலைத்தேனென தெரியாமலேயே
தலை வரை நீண்ட முதுகெலும்பிற்குள்
என்னுயிரை தேடி பயணிக்கிறேன்;
இடை மறித்து
அவனென் கண்களை உற்று நோக்கி
ஏதேதோ சொல்கிறான்;
ஒலிக்கு தானே, தேவ பாஷை?
அவனோ ஒளியில் உரையாடுகிறான்;
நான் என்பதை
தேடவா? தொலைக்கவா?யென
அவனிடம் கேட்காமலே
கவனித்தலின் கடைசி புரிதலில்
சட்டென பதிலைச் சொல்லி
கடந்து போகிறான், மீண்டும் என்னுள்;
அவனும் நானும் வேறல்ல தான் போல!

- இரா.ச. இமலாதித்தன்

காதலும் கடந்து போகும்!உன் பெரிய விழிகளுக்குள் தொலைத்தவற்றை
மீட்டெடுப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது;
சிதைக்கப்படாத உன் புருவங்களை போல
படர்ந்து கிடக்கிறது கடந்த கால நினைவுகளெல்லாம்;
என்னுள் ஆழமாக பதிந்து போன
உன் சிரிப்பொலியை ஞாபகப்படுத்துவதற்காகவே
தினமும் யாராவது என்னை கடந்து போகிறார்கள்;
உன் உருவத்தை போன்ற யாரை பார்த்தாலும்
சட்டெனெ படபடக்கிறது என்னுடல்;
அன்பென்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருந்த
ஆயிர கணக்கான நாட்கெளெல்லாம்
நொடிப்பொழுதில் கிழித்தெறியப்பட்டது
உன் குடும்பத்தினரின் நாட்காட்டியில்;
இது காதல் தோல்வியல்ல
என்னைவிட நீ அதிகமாய் எதிர்பார்த்த
நம்மிருவரின் திருமணத்திற்கு பின்பான
எதிர்கால வாழ்வியலின் தோல்வி;
என்றோ பிறக்க போகும் நம் குழந்தைக்கு
செந்தமிழில் பெயரை தேர்ந்தெடுக்கச் சொல்லி
ஒவ்வொரு நாளும் வற்புறுத்தி கொண்டிருந்தாய்;
எத்தனையோ சின்னச்சின்ன விசயங்களில்
திருமணத்திற்கு பிறகான நாட்களை
எப்படி வாழவேண்டுமென்று
கற்பனையால் கணக்கிட்டு வைத்திருந்தாய்;
இப்படி எத்தனையோ கனவுகளை கலைத்துவிட்டு
 நீயோ வேறு யாருடனோ  மணமுடித்து
வாழ தொடங்கி விட்டாய், குடும்பச்சூழலென்று;
நனோ மறக்கவியலா உன் நினைவுகளை சுமந்து
அன்பளிப்பாய் நீ கொடுத்த பெருஞ்சோகம் மறைத்து
முன்பை விட இன்னும் அதிகமாக சிரித்துக்கொண்டே
நடிக்க பழகி கொண்டிருக்கிறேன் - இந்த
காதலும் கடந்து போகின்ற அந்த நாட்களுக்காக!

- இரா.ச.இமலாதித்தன்

புன்னகை பூவே!பெண்ணின் புன்னகை பற்றி வர்ணித்த
எத்தனையோ கவிஞர்களின்
வார்த்தைகளெல்லாம் உயர்வுநவிற்சி புனைவென்று
கடந்து சென்று கொண்டிருந்த ஏதோவொரு நாளில்
என் கடந்த கால எண்ணங்களையெல்லாம்
தொலைய வைப்பதற்காகவே
நீ சிரித்து தொலைத்து விட்டாய்;
உதடுகளுக்கும் பற்களுக்கும் போட்டியாக
கண்களும் சிரித்து கொண்டிருக்கும் - அந்த
நிசப்தமான பெரிய புன்னகையை கண்ட பிறகே
என் கண்களிரண்டும் மோட்சமடைந்திருக்க கூடும்;
உன் சிரிப்பினில் எத்தனை பேரின் உடல்கள்
மீண்டும் உயிர்த்தெழுந்ததென தெரியவில்லை;
குறைந்த பட்சம் என்னருகிலாவது இனி
அந்த மந்திரப்புன்னகையை சிதற விடாமலிரு
ஏற்கனவே சின்னாபின்னமாகித்தான் கிடக்கிறது
இந்த சின்னஞ்சிறு மனது!

- இரா.ச.இமலாதித்தன்