நீ நான் காதல்!

-01-

உன்மழலை கொஞ்சும்
சிரிப்பில் கலந்த
செல்லப்பேச்சுகளில்
என்னை தொலைத்து
அடையாளமற்றவனான பின்னால்தான்
புரிந்துகொண்டேன்;
நான் என்பதே நீதான் என்பதை!

- 02-

பிஞ்சு இதழ்கள் போன்ற மழலை காலால்
செல்லமாய் எட்டி உதைக்கிறாய்,
பக்குவபட்டவனாய் உன் பாத சுவட்டில்
முத்தம் கொடுக்கிறேன்;
உன்னுள் வாழ்தலே அழகு!

-03-

சின்னஞ்சிறு அறையின் ஜன்னல் வழியே
உடலெங்கும் முத்தமிடுகிறது மழைச்சாரல்;
நானோ உன் மழலை கொஞ்சும் சிரிப்பில்
தொலைந்த நினைவுகளுக்குள் நனைகிறேன்!

-04-

கண்சிமிட்டும் நொடியில்
உன் கருவிழிகளுக்குள் பிறக்கிறேன்;
நீ ஆக்குபவள்.
உன் புன்னகையில்
என்னை தொலைக்கிறேன்
நீ அழிப்பவள்.
எப்போது கா(தலி)ப்பாய்?

-05-

ஒவ்வொரு நொடிகளும்
பல மணிநேரம் போல
மெதுவாய் கடப்பதால்,
கடிகார முட்களோடு
பெருயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறேன்,
என்னருகில் நீ இல்லாத நாட்களில்!

- இரா.ச.இமலாதித்தன்