நீயே நானாகினேன்!
-01-

அருகிலிருந்தும் பேச முடியாத சந்தர்ப்பங்களில்,
கண்கள் உன்னைத்தேடியே உற்று நோக்கும்;
உடல் மட்டுமே இங்கிருக்க,
அங்குமிங்கும் ஊசலாடும்
இந்த உயிருக்கு மோட்சம் கொடு!

-02-

நீயேதான் நானாக இருக்கிறாய்.
நீ நானானது எப்போதென யோசிக்கும் போதே
நான் தொலைந்து, நீயே வருகிறாய் நானாக!
நீ யாரென சொல்லிவிடு,
நான் நீயாகிவிட்டேன்!

-03-

நீ அருகிலில் இல்லாத நாட்களெல்லாம்
வறண்டு போய்விடுகிறது மனது.
உன்னை தேடியே தவம் கிடக்கிறது என் கண்கள்;
சீக்கிரம் வந்து நிவாரணம் தந்து விடு!

-04-

நம்மிருவருக்கும் இடையிலுள்ள
infinity அளவிலான Emotionகளை,
வெறும் Emoticon's தான் பரிமாறி கொள்கின்றன;
ஆனால் மனமோ 2G போல பரிதவித்து கிடக்கிறது!

-05-

நீ பாதரசம் போல பட்டும் படாமலேயே பழகுகிறாய்.
நான் தான் ஆக்ஸிஜனாய்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.
இன்னும் நமக்குள்
இந்த கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகவேயில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

தேவதையாய் நீ!

-01-

ஐந்தாம் மறையாகிபோன காதலுக்குள்,
உண்மைகள் ஊமையாகி
பொய்கள் சூழ் உரையாடல்களே
நிறைவானதாக உணரப்படுகிறது;
காதலும், காதலிப்பவர்களும் வேறு வேறுதான்!

-02-

நீ உதிர்க்கும் புன்னகைக்கும்
இதழ் வழியே
காதல்பூக்கள் கோடி மலரும்;
அந்த நொடியினிலே
உன்னிரு கண்களுக்குள்
என்னை இழுத்து,
இமைகளால் கட்டி போடும்;
நீ மாயம் செய்யும் தேவதை!

-03-

உன் கை கோர்த்து நடக்கிறேன்,
வானெங்கும் வானவில்;
மனதுக்குள் புதுச்சாரல்மழையாய்
நீ உதிர்க்கும் புன்னைகை;
குடைகள் போல கண்கள் ஏந்த,
நீ என் தேவதையாகி சிரிக்கிறாய்!

-04-

மெல்லிய குரல்களால்
என்னை என்னவெல்லாம் செய்கிறாய்;
சின்ன புன்னகையால்
வீணை போலவே மீட்டுகிறாய்;
உன்னுள் தொலைந்த
என்னை மீட்காமலே அடைக்கலம் கொடு!

-05-

உன்னோடு வாழப்போகும்
பொற்காலத்திற்காகவே,
ஒவ்வொரு நாளையும்
நொடி போல கடத்தி கொண்டிருக்கிறேன்;
சொர்க்கத்தின் வாசற்படிக்கு அருகில்
தேவதையாய் நீ!

-இரா.ச.இமலாதித்தன்