என் பிரபஞ்சமாகிறாய்!
-01-

தினமும் எத்தனை பெண்களை கடந்தாலும்
நினைவுகளில் நிற்பதில்லை;
பாவம், அவர்களுக்கும் கொஞ்சம் இடம் கொடு;
என்னுள் நீ மட்டுமே ஆக்கிரமித்து விட்டாய்!

-02-

நீ என்னோடு இல்லாத போது
சிலுவையில் அறையப்படுகிறேன்.
நீ அருகில் இருக்கையில் உயிர்த்தெழுகிறேன்.
நான் கடவுளல்ல;
ஆனால் நீயே எல்லாமுமாகிவிட்டாய்!

-03-

என் மடி மீது சாய்ந்து
மெளன புன்னைகையில்
பல கதைகள் பேசி என்னை பார்க்கிறாய்;
நான்கு யுகத்தை நொடியில் கடந்து
உன்னுள் தொலைகிறேன்
நீயே என் பிரபஞ்சமாகிறாய்!

-04-

உன்னாலேயே குழம்பி நிற்கிறேன்;
நீயே தெளிவுற செய்கிறாய்.
என்னுளேயே கடந்து தவிக்கிறேன்;
நீயே மீட்கிறாய்;
இது உளியின் வலி தாங்கும்
சிலையின் வேதனை!

-05-

என் தோள் சாய்ந்து நீ உறங்கும்போது,
உன் நெடுந்கூந்தலுக்குள் முகம் பதித்து
நான் தொலைந்து போகிறேன்.
மீட்காதே;
உன்னுள்ளேயே தொலைந்து விடுகிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்