திருமண வரவேற்பு!



திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி
புகைப்படத்திற்கும் முகம்காட்டி
பரிசொன்றை தந்து
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...

எட்டு வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்
வரவேற்பு பத்திரிகையை
எனக்கு தந்துவிட்டு
மணமேடையில் என்னவள் 
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...

நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிக்கையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது! 

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும்  தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

வீட்டில் விருந்தாளி!


நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம் 
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள் வந்துபோகும்
உன் அலைபேசி அழைப்பை
இந்த அழையா விருந்தாளிகளுக்காக
துண்டித்து கண்ணீர் வடிக்கிறது
என் கட்டைவிரல்!

 - இரா.ச.இமலாதித்தன்

திருவிழா குழந்தை!


திருவிழாக் கூட்டத்தில்
உனக்கு மட்டுமே பிடித்துப்போன
பொம்மையொன்றை 
என்னை கைக்காட்டிக் கேட்கும்போது
வீட்டில்தான் ஆறேழு வீணாகவே கிடக்குதென்று
வேண்டாமிது என்றுரைத்து
எனக்கு மட்டுமே பிடித்துப்போன ஒன்றை
எடுத்துவந்து நீட்டும்போது
வெடுக்கென்று அதைபிடித்திழுத்து 
கீழே தட்டிவிட்டு சிரிக்கிறாய்
அங்கே குழந்தையாய் நான்!

- இரா.ச.இமலாதித்தன்

தனிமையின் தாகம்!



கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள்
யாதுமற்ற வெறுமைகளால்
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
வரப்போர ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும்
நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின்
தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை
என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின்
தனிமையில் நான்!

- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள் திண்ணையிலும் வெளிவந்துள்ளது.

கடலோடியின் மரணம்!


காலத்தின் காலடியில்  சிக்கிக்கொண்டு
கடலில் கலக்கத்தோடு கரைதேடியலைந்து
பயணிக்கின்ற தருவாயில்
கலங்கரைவிளக்கத்தின் ஒளிக்கீற்றை 
என்விழிகள்துலாவிக்கொண்டிருக்கின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்
பாய்மர படகின் துவாரம்வழி
ஓரவஞ்சனையில் ஒய்யாரமாய்  சிரிக்கிறது
நிர்ணயிக்கப்பட்ட என் மரணம்!

- இரா.ச.இமலாதித்தன்

கற்பு!



நகரத்துக் காட்டானின்
காமக் காட்டாற்று வெறியாட்டத்தில்
பறிபோனது
தெருவோரம் குப்பை பொறுக்கும்
சிறுமியின் கற்பு!

சூழ்ச்சி செய்யும்
சூட்சமக்காரர்களால் சூழப்பட்டுள்ள
இந்த  சமுதாயத்தில்
இவன் போன்ற சந்தர்ப்பவாதிகளின்
அற்ப சந்தோசங்களுக்காக
இங்கே சந்திசிரிக்கிறது கற்பு!

சமுதாயத்தின் மீதுள்ள
நம்பிக்கைகளும்
பலநேரங்களில் சூறையாடப்படுவதால்
சூழ்நிலைக் கைதியாய்
கற்பிழந்து நிற்கின்றது மானுடம்!

பணத்திற்காக பள்ளிப்பருவத்திலேயே
வீதிக்கு வரவழைத்த
வறுமை போன்ற சமுதாயப் பிழைகளை
இல்லாதழிக்க 

ஒருமித்த குரலாய் ஒன்றிணைவோம்
மானிடராய்!

 - இரா.ச.இமலாதித்தன்



இந்த கிறுக்கலை பற்றிய விமர்சனத்தை, விமர்சனம் வலைப்பக்கத்திலும் பார்க்கலாம்


மழைக்காலங்களில்!


-001-


மழைக்காலங்களில்
உன்னை தொடாமல்
மண்ணை தொடும் மழைத்துளிகள்
கண்ணீரோடே வழிந்தோடுகிறது
சாலையோர  பாதைகளில்!

-002-

மழைக்காலங்களில்

உன்னை தொட்டுவிட்டு
மண்ணை தொடும் 
மழைதுளிகள்தான் 
மோட்சமடைகிறதாம்
குடையை கொஞ்சம்
தூர வைத்துவிட்டு
தூரலில் உன் முகத்தை காட்டி
எனக்கு செய்த பாவம் போக்க
இதுபோல் புண்ணியங்கள் சில
செய்து விடு!

-003-

மழைக்காலங்களில்
உன்மேல் விழுந்த
ஒருசில மழைத்துளிகளும்
பிரிய மனமில்லாமல்
உன்னை இறுகப்பற்றி கொள்கின்றன
என்னைபோலவே!

-004-

மழைக்காலங்களில்
நீ குடை பிடித்து
மழையில் நடக்கும்போதெல்லாம்
உன்னுள் கூடல் கொள்ள முடியாத
மழைதுளிகளெல்லாம்
கோபித்து கொண்டு சண்டையிடுகிறது
உன் குடையோடு!


- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள்  யூத்புல் விகடன்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள்  தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

தமிழனின் தீபாவளி!


தீபஒளி பரபரப்பில்பற்றிக்கொண்ட
விழாக்கால கடைகளையெல்லாம்  
வெள்ளக்காடாய் மிதக்க விட்டு
வெளியேறி சென்றுவிட்ட
என்தமிழ் இளைஞர்களை பற்றி
உருமாறிப்போன வீதிகளெல்லாம்
பெருமூச்சு விட்டுக்கொண்டே  
ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன
அசுரனை கொன்ற இந்நாள்தான்
இவர்களுக்கு இனியநாளாமென்று!

- இரா.ச.இமலாதித்தன்

அம்மா!



ஒருகாலத்தில் ஒற்றை வார்த்தையே
உச்சரித்து சொல்ல தடுமாறி
உளறிய என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து வெளியே
தாறுமாறாய் வெடித்து சிதறும்
வார்த்தைகளால் யாவும்
உன்மனதை
சுக்குநூறாய் உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட உதிர்க்காமல்
ஊமையாகவே இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான மரண தண்டனை தான்!

நான் கோபப்பட்டு
கடுஞ் சொற்களை தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம் எடுத்து வீசியும் கூட
என்மீது மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே!

உன் துக்கம் பலவற்றில்
நான் பங்குகொள்ளவில்லை
நீ கதறி அழுத பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லை
அப்பறம் நீ மட்டுமெப்படி
என் சிறு துளி கண்ணீருக்கும்
படபடத்து ஒப்பாரி வைக்கிறாய்?

நான்  வெற்றிபெற்ற வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாக சொன்னாய்;
நான் தோல்வியுற்ற வேளைகளில்
வேறு யாரைவது தேடிபிடித்து
அவர்கள் மீதல்லவா
நீ பழிபோடுகிறாய்!

உன்னை சிரிக்க வைக்க
எந்தொரு சிறு முயற்சி கூட
நான் எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு  வருகிறது?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
'உடம்பு ஏறிவிட்ட'தென்று
வினவியதை கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
'இப்படி இளைத்துவிட்டாயே?’யென்ற
உன் வாய்மொழி கேட்ட பின்னே
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல் தேய்பிறை போல்
தோன்றுவதன் அர்த்தமென்ன?

'நீ சாப்பிட்டாயா ?’
என்று கேட்குமுன்னே
'சீக்கிரம் வந்து சாப்பிட’ சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு பசியென்ற ஒன்றை
இறைவன் கொடுக்கவேயில்லையா?
நான் உண்டுவிட்டால்
உன்பசியும் மறைந்துவிடுகிறது
உன் மனதும் நிறைந்துவிடுகிறது
இந்த உண்மை  எந்தொரு அறிவியலிலும்
இதுவரையிலும் நிரூபிக்கப்பட வில்லையே!

உன் பாசம் என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி போய்விட்டதென்ற
உண்மையை உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன் தாயே!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் யூத்புல் விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

என் தோழா!





கனரக ஆயுதங்கள் பலகொண்டு
அய்யோவென்ற அலறலும்
அழுகுரலும் கொடுத்திட்ட
எந்தமிழினம் அனைத்தையும்
கணப்பொழுதில்
உயிரோடே மண்ணோடு
மரணக்குழியில் புதைத்தவனை
தோலுரிக்க உன் தோள்கொடு என் தோழா!

வீடற்று வீதியற்று நாடற்ற நாடோடிகளாய்
நடமாடக்கூட முடியாமல் -
எந்தமிழன் நாதியற்று
முட்கம்பிகளுக்குள் மூச்சை மட்டும்
முழுவேளை உணவாக உட்கொண்டு
உயிர் மட்டும் உள்ளவனாய்
முடங்கி கிடப்பவனை முடுக்கிவிட
முயற்சியெடு என் தோழா!

உணர்வற்ற நம்மக்கள்
உணர்ச்சியற்ற உன்தோள்கள்
இவ்விரண்டும் புத்துணர்ச்சிபெற
புதுவழி கண்டிடு என் தோழா!

வன்மம் கொண்ட வன்முறை வெறியனை
இல்லாதழித்தொழித்து
என்மக்களின் துயரங்களை துடைத்தழிக்க
விருட்சமாய் ஒன்றிணைய
உன் இருகரம் கொடுத்திடு என் தோழா!

என் தமிழினம் கொன்று சுகம் காணும்
பிணந்தின்னி இனவெறி கூட்டத்தை
இனங்கண்டு பகை முறிக்க
புறப்படு என் தோழா!

புரிதல் கொண்டு புரட்சிகள் வெடிக்கும்
அதுவரை புலிகளாய் பதுங்கி
பொறுத்திரு என் தோழா...
பாயும் நாட்கள் வெகு தூரமில்லை
அப்போது களத்திற்கு
போராட வந்திடு என் தோழா!

- இரா.ச.இமலாதித்தன்