தேர்தல் முதலீடு!
பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!

எங்களின் பலம்கொண்ட
பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம் தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு!

சோறள்ளி உண்பதற்கும்
சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு!

எவன் வென்றால் நமக்கென்ன
எதிர்கொள்ள தேவையென்ன?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு...!

- இரா.ச.இமலாதித்தன்இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


ஜனநாயக ஆசியம்!தன்னுள்ளே தவறென்று
இனம்காட்டும் உள்ளத்தை
இடைமறித்து கொன்றாலும்
வருடத்திற்கு ஒருமுறையென்று
இடை சொருகளாய் வந்துசெல்லும்
இடைத்தேர்தல்களில்
பணம் வாங்கி வாக்களிப்பதை
மன்றாடி எதிர்த்து பார்த்து
மரணித்தே போய்விடுகிறது
மறத்து போன மனசாட்சி!

என் வீட்டில் மூன்றென்று
ஒன்றுக்கு நூறென்று
மொத்தமாய் முந்நூறை
முன்பணமாய் விலைபேசி
தன்வாக்கு தலைவனுக்கேயென்று
பசும்பாலில் கைவைத்து
சத்தியமும் செய்து கொடுத்து
வாக்களிக்கும் வாக்காளனால்
ஆசியமாய் போனது ஜனநாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.