துரோக கூட்டம்!


சூழ்ச்சியின் வலைகள்
பின்னப்பட்டு கொண்டிருக்கின்றன
சில சிலந்திகளின் முயற்சியால்...
சிங்கம் கால் இடறி விழுவதை 
ரசிக்க காத்திருக்கிறது
பூனைகள் கூட்டம்...
நரிகளை நம்பி ஏமாறுவதை விட
நான் நானாகவே இருந்து விடலாமென
நற்சிந்தனை தானாக எழுகிறது;
பதுங்கி கிடக்கும்  பன்றிகளெல்லாம்
ஒன்றாய் இணைகிறது;
அப்போதும்
சிங்கம் தனித்தே காத்திருக்கிறது
துரோகத்தை சின்னா பின்னமாக்கி
தன் சுயத்தை வெளிக்காட்ட!

- இரா.ச.இமலாதித்தன்

அவளுக்கான ஏமாளி!


இனி புத்தம்புதிதாய்
அவள் பிறக்க போவதில்லை
எங்கிருக்கிறாளோ?
என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?
தனிமையில் தவித்து கொண்டிருக்கிறாளோ?
படித்து கொண்டிருக்கிறோளோ?
பணி செய்து கொண்டிருக்கிறாளோ?
இல்லை வழமைபோல;
கணவனாக வரப்போகும் அவன்
இவளது கண்ணசைவுகளுக்கே
கட்டுப்பட வேண்டுமென்று
எந்த கோவில்களிலாவது
நெய்தீபம் ஏற்றி கொண்டிருக்கிறாளோ...
எது எப்படியோ
ஓர் ஏமாளி காத்து கொண்டிருக்கிறான்
முகநூலில் கிறுக்கிய படியே!

- இரா.ச.இமலாதித்தன்

ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!


சுழியம் ஒன்றென்ற பைனரிக்களால்

கணினி மொழி படித்த பின்னும்
எமக்கான களங்கலெல்லாம்
என்திசையும் முற்றுகையிட 
வெறிச்சோடிய எதிர்கால சுவர்களில்
சித்திரங்கள் தீட்டிக் கொண்டோம்
தூரிகைகள் ஏதுமின்றி!

இருநூறு வருடங்கள் அடிமைப்படுத்திய
இருபத்தாறு எழுத்தே கொண்ட
அந்நிய ஆங்கிலம்
இன்றெங்கள் தகப்பன்மொழியாய் உருவெடுக்க;
இருநூறு சொச்சம் எழுத்துகள் கொண்ட
பல்லாயிர ஆண்டுகள் பழமைமிக்க
எமது தாய்மொழியின் கருகலைத்தோம்!

ஆங்கிலம் என்பது அறிவல்ல
அது வெறும் மொழி என்பதை மறந்தே
தமிழனென்ற அடையாளத்தை
எம் சுயத்தோடு இழந்து 
சூழ்நிலை கைதியானோம்!

அழகியல் மொழியான
அம்மாவென்ற வார்த்தை கூட
வழக்கொழிந்து போக 
பிரமிடுகளுக்குள் உயிரற்று கிடக்கும்
வெற்றுடலாகி போன
மம்மியென மொழிச்சிதைவோடு  
உச்சரிக்க வைத்தோம்
நிகழ்கால தலைமுறையை!

உலக மொழிகளின் ஆணிவேர்
செந்தமிழை தொலைத்தது போலவே  
எமக்கான பூர்வீக அடையாளங்களையும்
ஒவ்வொன்றாய் இழந்த பின்னே
அமீபாவாய் அடையாளங்கள் ஏதுமின்றி
யாராகவோ வாழ்ந்திருப்போம்
ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!

 - இரா.ச.இமலாதித்தன்

நீ கடவுளில்லை!


துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது
எதிர்கால வாழ்வியல்!
உன்னாலேயே உருவாக்கப்பட்டது
உனக்கான எல்லைகள் - அது
விரிவடைந்து விட்டதாகவே
கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்!

நீ இரவலாய் வந்த வெற்றுடல்
புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி;
குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்
உடலால் சிலரை வென்றாலும்
உன் காலடி யாருக்கு சொர்க்கம்?

பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்
சிலருடல் அடிமைசாசனம்!
நீ மதம் கொண்ட மானுடம்
ஆன்மீகம் உன் ஆறுதல்
பலர் மனம் கொன்ற வெண்ணுடல்;
உன்னை கட்டுப்படுத்த
கேடயமென்ற ஆயுதம் வீண்
புரிந்து கொண்டோம்;
தன்னையே அழித்துக் கொள்ளும்
நீ ஆணவத்தீ !

பிழை செய்து கொண்டே
பெரும்துரோகம் செய்கின்றாய்
உன்மீதான மாயை 
புகழ் பதவி உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்;
அதன் பின்னும் 
உனக்கும் சில நினைவேந்தல் நிகழ்வு
ஊருக்கொன்று நடைபெறும்
ஆனாலும் நீ கடவுளில்லை! 


- இரா.ச.இமலாதித்தன்