உன்னோடு உரையாடும்போது!ஒவ்வொரு நாட்களும்
உன் அழைப்பு வந்தபிறகு தான்
சுழியத்திலிருந்து தொடங்கி
சுழலத் துவங்குகிறது
இருபத்திநாலு மணி நேரத்தின் 

னக்கான கடிகார முட்கள்!

உரையாடலில் கேள்விகள் கேட்பதென்பது
எளிதான போதும்
உன்னிடம் பேசும்போது
வினாக்கள் கூட வெளிவர மறுத்து
உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்துகின்றன;
நீ கேட்கும் கேள்விகளுக்கு
என்னிடம் விடையில்லை என்பதை
முன்னரே நீ மட்டும் எவ்வாறு அறிந்துவிடுகிறாய்?

அதுதெரியாமலேயே
எங்கேயோ தலைமறைவாய்
ஓடிஒளிந்து கொண்ட உனக்கான பதில்களை
என்னிடம் தேடியலைந்து
விடைகிடைக்காமல் போனதும்
உரசிக் கொள்ளாமல் உறங்கிக் கிடக்கின்றன
என்னிரு உதடுகள்!

பின்பு உளறத்தொடங்கிய உதடுகள்
ஊமையானதை சற்றே உணர்ந்துகொண்டு
இரு உதடுகளும் விழித்து
இதழ்களாய் விரிக்கும்போது
வார்த்தைகள் நொண்டியடித்து
அங்கே ஊனமாய் நிற்கிறது
நம் உரையாடல்!

முடிவிலியாய் நீ
என்னோடு இருப்பாயென்ற
மாயையை உணரமறந்து
அப்புறம்,வேறென்ன, ம்ம்,சொல்லு,சரியாவென்ற
ஐந்து வார்த்தைகளால் நீ உரையாடும்
அந்தவொருசில நாழிகைக்குள்
உன்னுள் உறைந்து போய்விடுகிறேன்
அறிவிலியாய்!

உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் 
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.