அம்மா!ஒருகாலத்தில் ஒற்றை வார்த்தையே
உச்சரித்து சொல்ல தடுமாறி
உளறிய என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து வெளியே
தாறுமாறாய் வெடித்து சிதறும்
வார்த்தைகளால் யாவும்
உன்மனதை
சுக்குநூறாய் உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட உதிர்க்காமல்
ஊமையாகவே இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான மரண தண்டனை தான்!

நான் கோபப்பட்டு
கடுஞ் சொற்களை தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம் எடுத்து வீசியும் கூட
என்மீது மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே!

உன் துக்கம் பலவற்றில்
நான் பங்குகொள்ளவில்லை
நீ கதறி அழுத பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லை
அப்பறம் நீ மட்டுமெப்படி
என் சிறு துளி கண்ணீருக்கும்
படபடத்து ஒப்பாரி வைக்கிறாய்?

நான்  வெற்றிபெற்ற வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாக சொன்னாய்;
நான் தோல்வியுற்ற வேளைகளில்
வேறு யாரைவது தேடிபிடித்து
அவர்கள் மீதல்லவா
நீ பழிபோடுகிறாய்!

உன்னை சிரிக்க வைக்க
எந்தொரு சிறு முயற்சி கூட
நான் எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு  வருகிறது?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
'உடம்பு ஏறிவிட்ட'தென்று
வினவியதை கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
'இப்படி இளைத்துவிட்டாயே?’யென்ற
உன் வாய்மொழி கேட்ட பின்னே
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல் தேய்பிறை போல்
தோன்றுவதன் அர்த்தமென்ன?

'நீ சாப்பிட்டாயா ?’
என்று கேட்குமுன்னே
'சீக்கிரம் வந்து சாப்பிட’ சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு பசியென்ற ஒன்றை
இறைவன் கொடுக்கவேயில்லையா?
நான் உண்டுவிட்டால்
உன்பசியும் மறைந்துவிடுகிறது
உன் மனதும் நிறைந்துவிடுகிறது
இந்த உண்மை  எந்தொரு அறிவியலிலும்
இதுவரையிலும் நிரூபிக்கப்பட வில்லையே!

உன் பாசம் என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி போய்விட்டதென்ற
உண்மையை உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன் தாயே!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் யூத்புல் விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.