விழியின் வழியில்!பொன்னிற மாலையில்
மண்ணுக்குள் மூழ்க
ஆயத்தமானது ஆதித்தன்;
வெகுநேரமாய்
நகர்ந்துக் கொண்டிருக்கும்
இந்த பாதையின் சுவடுகள்
நெடுந்தூரம் நீண்டிருக்கவில்லை;
வழி தெரியாமலே
கால்கள் இரண்டும்
ஒன்றோடொன்று முந்திக்கொண்டிருந்தன;
எந்தவொரு துருவமும்
அனுமானிக்கப்படாத வேளையில்
பேரிடருக்குள் அகப்பட்டிருப்பதாய்
அவதானித்திருந்தன விழிகள்;
பேரிருள் சூழ்ந்த
கார்மேக வானை நோக்கி
நிலவை தேடி
தோல்வியடையும் தருவாயில்
மாத வான் விடுமுறையை
நினைவு கூர்ந்து கொண்டிருந்தது மூளை;
வெகுநேர சுழற்சியின்
பயண களைப்பில்
சோர்வோடு திளைத்திருந்தது உடல்;
நீண்ட நேரம் நிகழ்வுகளுக்கிடையில்
காதோரம் ரீங்கரமிட்டது  அழைப்பொலி;
இமைகள் திறக்கும்போது
வெயிலின் வெளிச்சம்
விழிகளுக்குள் ஊடுருவ
மணி ஏழாகி இருந்தது;.
மீண்டுமந்த வழமையான
அலுவல்கள் தொடர
எழுந்து கொண்டிருக்கிறேன்
கனவிலிருந்து!

- இரா.ச.இமலாதித்தன்

அடையாளம்!மதத்தின் குரு
சாத்வீக மனது
சாமனிய தவம்
ஏமாற்ற வலி
வள்ளுவ சிலை
காதலின் தோல்வி
நிகழ்கால ரௌத்ரம்
வறுமையின் உருவம்
கவிஞனின் அடையாளமென
அலங்கரிக்கப்படுகிறது
முகத்தில் தாடியாய்!

- இரா.ச.இமலாதித்தன்