
கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள்
யாதுமற்ற வெறுமைகளால்
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
வரப்போர ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும்
நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின்
தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை
என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின்
தனிமையில் நான்!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் திண்ணையிலும் வெளிவந்துள்ளது.
காலத்தின் காலடியில் சிக்கிக்கொண்டு
கடலில் கலக்கத்தோடு கரைதேடியலைந்து
பயணிக்கின்ற தருவாயில்
கலங்கரைவிளக்கத்தின் ஒளிக்கீற்றை
என்விழிகள்துலாவிக்கொண்டிருக்கின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்
பாய்மர படகின் துவாரம்வழி
ஓரவஞ்சனையில் ஒய்யாரமாய் சிரிக்கிறது
நிர்ணயிக்கப்பட்ட என் மரணம்!
- இரா.ச.இமலாதித்தன்
நகரத்துக் காட்டானின்
காமக் காட்டாற்று வெறியாட்டத்தில்
பறிபோனது
தெருவோரம் குப்பை பொறுக்கும்
சிறுமியின் கற்பு!
சூழ்ச்சி செய்யும்
சூட்சமக்காரர்களால் சூழப்பட்டுள்ள
இந்த சமுதாயத்தில்
இவன் போன்ற சந்தர்ப்பவாதிகளின்
அற்ப சந்தோசங்களுக்காக
இங்கே சந்திசிரிக்கிறது கற்பு!
சமுதாயத்தின் மீதுள்ள
நம்பிக்கைகளும்
பலநேரங்களில் சூறையாடப்படுவதால்
சூழ்நிலைக் கைதியாய்
கற்பிழந்து நிற்கின்றது மானுடம்!
பணத்திற்காக பள்ளிப்பருவத்திலேயே
வீதிக்கு வரவழைத்த
வறுமை போன்ற சமுதாயப் பிழைகளை
இல்லாதழிக்க
ஒருமித்த குரலாய் ஒன்றிணைவோம்
மானிடராய்!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கலை பற்றிய விமர்சனத்தை, விமர்சனம் வலைப்பக்கத்திலும் பார்க்கலாம்