திணைக்காதல்!

நாற்றுநட்ட கழனியெங்கும்
வரப்புப்பாதை வழியுனூடே
வரையறையின்றி வகைவகையாய்
பலகதைகள் பேசி...
பள்ளிச்சென்ற பல நாட்களில்
படிக்காமல் ஊர்சுற்றி
கைகோர்த்து திரிந்தோமே
அப்போதே பசுமையாய் நம்மிடையே
விளைந்தது மருதக் காதலோ...?

கடல் அலையாய் பொங்கி விழும்
ஆற்றுப்படுகை அடிவாரத்தில்
மீன்பிடித்த மகிழ்ந்த போதும்...
காகிதம் கிழித்து கப்பல் விட்டு
சேறுபடிந்த சிற்றுடையோடு
நாமிருவரும் நீச்சல் பழகி
நித்தம் மூழ்கிக்கிடந்த
அந்நாட்களிலேயே நம்மை
நனைத்தது நெய்தல் காதலோ...?

மழைக்கால நேரங்களில்
மலைக்கோயில் பாறையில்
மாலைப்பொழுதெல்லாம்
நாமிருவரும் சறுக்கி விளையாடி
இறுதியில் கோவில் நடைசாத்தும்
மணியோசையில் ஓடோடி
கீழே சிதறிக்கிடக்கும்
குங்கும திருநீரெடுத்து
உன் நெற்றியில் என்னை
திலகமிடச் சொன்னாயே
அப்போதே நம்முள்
படிமமானது குறிஞ்சிக் காதலோ...?

விடுமுறை நாட்களில்
ஊருக்கு வெளியே
ஒதுங்கி நிற்கும் காட்டுக்குள்
விறகு சேகரிக்க பத்து பேராக
பட்டாளமாய் சென்றாலும்...
எனக்கு மட்டும் சிறுகாயங்கள்
ஏற்படும் தருணங்களிளெல்லாம்
உன் கண்கள் கலங்கியதும்...
என்னை முறைத்த
உன் அண்ணனுக்கு புரிந்த
எனக்கு புரியாமல் போனபோதே
வளர்ந்தது முல்லைக் காதலோ...?

காடும் மலையும் சுற்றித் திரிந்தும்
காற்று மழையிலும் கூடி இருந்தும்
உன்னை முழுவதுமாய் அறியத்தெரியாத
காதல் மழையில் நனையத்தவறிய
அறிவிலியாய் அலைந்ததையும்
உணர்கிறேன் நானின்று ...
இதுபோல் வெறுமையில் வெந்து தணியும்
குழப்பநிலைதான் பாலைக் காதலோ...?

புரிதலும் புரிதல் நிமித்தமாய்
பெயரில்லா ஆறாம் திணையால்
நாமிருவரும் அன்பால் இணைந்து
திணைக்காதலுக்கு தீர்வு காண
இன்னும் எத்தனை நாட்கள்
நான் காத்திருக்க வேண்டுமோ...?

- இரா.ச.இமலாதித்தன்