என் வழி நீயானாய்!


















-01-

உன் காலடிபட்ட இடங்களெல்லாம்
எனக்கான சாலையின்
வழித்தடங்களாகி போனது.
இனி மிச்சமிருக்கும் வாழ்நாட்களும்
உன்னை பின் தொடர்ந்தே
என் பயணம் அமையும்!

-02-

எங்கு தொலைத்தேனென தெரியாமல்
உன் கண்களுக்குள்
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைவதும் மீள்வதுமாக நீளும்
இந்த தேடலும் ஓர் அழகு,
உன்னைப்போலவே!

-03-

உன் விரல்கள் கோர்த்து,
பல கதைகள் பேசி,
நெடுந்தூர பயணங்களில்
நம்மிருவரின் கைகள் கூட கட்டியணைத்து
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
விரல்கள் வழியாக!
நாம் தான் ஊமையாகிறோம்!

-04-

ஒவ்வொரு முறை பேசி முடிக்கையிலும்
எதையுமே பேசவில்லையென்றே தோன்றுகிறது.
மிச்சமிருப்பதை பேசி முடிக்க
வாழ்நாளே தேவைப்படலாம்,
துணையாய் வந்துவிடு!

-05-

உன் கண்களுக்குள் குடியிருக்க
தவமிருந்து கொண்டிருக்கிறது என்னுயிர்;
வரம் கிடைக்கும் முன்
உன்னுள் சங்கமிக்க ஆயத்தமாகிறது மனது;
இனி நீயே நான்தான்!

- இரா.ச.இமலாதித்தன்

நீ எந்த கிரகத்து தேவதை?


















-01-

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத
நொடிகளுக்கு தான்,
எதிர்காலத்தின் மீதான ஏக்கங்கள் இருக்கும்.
உன்னுள் என்னை தேடித்தொலையும் நேரமெல்லாம்
நானும் ஓர் ஏலியனாய் உருமாறி
பிரபஞ்சம் கடந்து
எங்கெங்கோ பயணிக்க தொடங்குகிறேன்!
நீ எந்த கிரகத்து தேவதை?

-02-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-03-

நீ என் தோளில் சாய்ந்து
உறக்கம் கொள்கிறாய்;
நானோ உன் கூந்தலுக்குள் முகம் பதித்து,
பெருங்கனவோடு உன்னுள் தொலைகிறேன்;
நீயே என்னை மீட்டுக்கொடு!

-04-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் அருகருகே
உரசாமலேயே பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!


-05-

கோபப்பட்டு குட்நைட் என்கிறாய்;
எதுவும் தெரியாததை போலவே
குட்நைட் சொல்லி,
உனக்காகவே ஆன்லைனிலேயே காத்திருக்கிறேன்.
மீண்டுமொரு குட்நைட்டுக்காக!

- இரா.ச.இமலாதித்தன்