காதலோடு!-01-

என் கனவுச்சாலையின் அருகில் வந்து
துயில் கொள்கிறாய்;
உன் மனதெங்கும் பரவிக்கிடக்கும்
பேராசை போர்வைகளை துகிலிருத்து,
அமிழ்தம் பகிர்கின்றேன்!

-02-

இந்த காதலை சுற்றியே
இவ்வுலகமும் நிரம்பி வழிகிறது;
நமக்கான காதலும் கூட
உந்தன் காலடி தேடியே
எனக்கான பாதைகளை
விரிவடைய செய்கிறது
நீயே என் வழி!

-03-

என் கோபங்களும்,
உன் கோபங்களும்
தனித்தனியாய் இருக்கும்போது
கோபமாகத்தான் இருக்கின்றன;
நம் இருவருக்குள் வரும் போதுதான்
மரணித்து போய் விடுகின்றன!

-04-

விடிய காத்திருக்கும் இரவில்
உன் கூந்தலுக்குள் குடிபுகுந்து,
உடலை திரியாக்கி தீமுட்டி
அமிழ்தம் கசியும் உன் எச்சில்களால்
அணைக்க அனுமதி தருவாயா?
உன்னை அணைப்பேன்!

-05-

உன்னை என்னிலிருந்து
பிரிக்கமுடியாத ஒற்றை புள்ளியில்
நாமென்ற ஒன்றே
என் நினைவுகளின் வழியே
உச்சமடைவதாய் உணர்கிறேன்.
அங்கும் நான் என்பது நீதான்!

- இரா.ச.இமலாதித்தன்