தேவதையின் கணவன்!

ஏதோதோ உருவகப்படுத்தி
எழுதினால்தான்
காதலியைப் பற்றிய
கவிதை வருமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்...
உவமைக்காக ஒவ்வொன்றாய்
இவ்வுலகில் தேடியலைந்து
உனக்கான மாற்றுரு
ஒன்றுமில்லையென்ற 
உண்மையை உணர்ந்தபின்
வார்த்தைகள் ஊமையாகி
சொற்களெல்லாம் உதிரத்தை உதிர்த்து
வெற்று வரிகளாய் மட்டுமே
காகிதத்தில் வந்து விழுகின்றன;


உயிர்களெல்லாம்
பிரம்மனின் படைப்பென்று
எல்லோரும் சொல்லிக்கேட்டிருந்தும்
கண்கள் கதை பேசுவதும்
இதழ்கள் எட்டிப் பார்ப்பதும்
உன்னுள் மட்டுமெப்படி
இந்தவொரு முரண்பாடென்று
உன்மீதான சில சந்தேகங்கள்
என்னுள் அடிக்கடி எத்தனிக்கிறது;


தேவதையை
கதைகளிலே கேட்டதுண்டு
என் கண்ணெதிரே நீ வந்தபின்தான்
நேரடியாய் கண்டுகொண்டேன்...
எனக்கான தேவதையே
உன் கரங்களைப் பற்றிக்கொள்ளும்
கணவனாய் நான் மாற
சம்மதம் சொல்வாயோ இல்லை
சங்கடத்தில் கொல்வாயோ?


- இரா.ச.இமலாதித்தன்