உடன் பிறப்பே!
செந்தமிழென்றாய்
தன்மக்கள் நீயென்றாய்
என் உடன்பிறப்பே வாவென்றாய்
எப்போதும் நீ மட்டுமே வென்றாய்;
மொழிதான் உன் மூச்சென்றாய்
மூச்சை திணறடித்து
மூழ்கி கிடப்பதுவும் பிடிக்குமென்றாய்;
பகுத்தறிவே தன்மானம் காக்கின்ற
மேலாடை என்றுரைத்தாய் - இப்போதோ
உள்ளாடையே இல்லாமல்
உல்லாசமாய் இருப்பதுகூட பிடிக்கிறதென்கிறாய்;
வாக்களித்தவர்களுக்காகவே வாழ்கிறேனென்றாய்
தமிழகமே தன் குடும்பமென்றாய்
ஓட்டுக்காகவே நீ உளறிக்கொண்டிருப்பதை
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த பின்புதான்
உணர்ந்து கொள்கிறோம் நாங்களும்
உன் குடும்பம் மட்டும் தான்
ஒட்டுமொத்த தமிழகமென்று!

- இரா.ச.இமலாதித்தன்