திருமண வரவேற்பு!திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி
புகைப்படத்திற்கும் முகம்காட்டி
பரிசொன்றை தந்து
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...

எட்டு வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்
வரவேற்பு பத்திரிகையை
எனக்கு தந்துவிட்டு
மணமேடையில் என்னவள் 
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...

நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிக்கையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது! 

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும்  தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

வீட்டில் விருந்தாளி!


நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம் 
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள் வந்துபோகும்
உன் அலைபேசி அழைப்பை
இந்த அழையா விருந்தாளிகளுக்காக
துண்டித்து கண்ணீர் வடிக்கிறது
என் கட்டைவிரல்!

 - இரா.ச.இமலாதித்தன்

திருவிழா குழந்தை!


திருவிழாக் கூட்டத்தில்
உனக்கு மட்டுமே பிடித்துப்போன
பொம்மையொன்றை 
என்னை கைக்காட்டிக் கேட்கும்போது
வீட்டில்தான் ஆறேழு வீணாகவே கிடக்குதென்று
வேண்டாமிது என்றுரைத்து
எனக்கு மட்டுமே பிடித்துப்போன ஒன்றை
எடுத்துவந்து நீட்டும்போது
வெடுக்கென்று அதைபிடித்திழுத்து 
கீழே தட்டிவிட்டு சிரிக்கிறாய்
அங்கே குழந்தையாய் நான்!

- இரா.ச.இமலாதித்தன்