இனிய பொழுதுகள்!காலைபொழுதில் தோளில் துண்டோடு
வாயில் வேப்பங்குச்சியுமாய்
கொல்லைபுற வாசல்வழி
வயல்வெளி ஒத்தையடி பாதையில்
எட்டி நிற்கும் குட்டி முட்களை மிதித்துகொண்டே
ஆற்றங்கரை பாதையோர
கருவைமர கிளைகளின் கீரல்களோடு
குறுக்கே வந்தவரையும்
சிலநேரம் குப்புற தள்ளிவிட்டு குளிக்க ஓடிய  

மின்னல்நேர தருணங்களும்...

சீரும் ஆற்றின் படித்துறை ஓரமாய் 

பாய்ந்து குதித்து கீறும் மணலிடையே
பாதங்கள் படிய நின்று மூச்சை இடைநிறுத்தி
பலமணிநேரம் மூழ்கி கிடந்து 
நெஞ்சளவு நீரினுள் நீச்சலோடு நிலைத்து
லயித்து கிடந்ததும்...
வற்றிய ஆற்றில் இடுப்பளவு நீரினுள்ளே
கருத்த கிடந்த பல ஒருரூபாய் நாணயங்களை 
கண்டெடுத்து களிப்புற்றதும்...
பாசி படிந்த படிகளை எண்ணி
என் பெயரையும் எழுதி பார்த்து மகிழ்ந்ததும்...
கிளிஞ்சல் எடுத்து நீரை கீறி தட்டுக்கல் விட்டு 

தம்பட்டம்  அடித்து சிரித்ததும்...
துண்டினாலே வலைவீசி  துள்ளிக்குதித்த 

சின்னஞ்சிறு மீன்களையெல்லாம் 
அள்ளியெடுத்த அந்த காலை பொழுதுகளும்...

ஒய்யாரமாய் ஊர்சுற்றி
பனை இலந்தை  ஈச்ச மரம் தேடியலைந்த
அந்த மதியநேர பொழுதுகளும்... 


ஆத்தங்கரையோர ஆலமர நிழலில்
பாலத்து மதில்மேல பலமணிநேரம் அமர்ந்து
ஊர்கதை பேசி திரிந்த அந்த மாலை பொழுதுகளும்...
இதுபோல் இன்னும்பல இனியபொழுதுகள்
இனிவொரு நாளும் திரும்பவும் வந்துவிடுமா?  - இரா.ச.இமலாதித்தன் 


இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

காதலியே!
-001.-

தமிழ்மொழி
செம்மொழி என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து விழுந்த
வார்த்தைகளால்!

-002.-

உன்
இதழ்களால் வெளிப்படும்
வார்த்தைகள் கேட்டு
உதிர்ந்து விட்ட பூக்களும்
உயிர்கொள்கின்றன
நீ அறிவியலின் புதுப்பரிமாணம்!


- இரா.ச.இமலாதித்தன் 

_

நீ நான் காதல்!
-001-

விடிகாலை பொழுதுகளில்

சாலையோரம் 
நீ பயணிக்கும் நேரமெல்லாம்
சூரியனும் விரைவாகவே
எழுந்து விடுகிறது
உன்னை தரிசிப்பதற்காக!

-002-

மாலை பொழுதில்

உன்புன்னைகைக் கண்டு 
நிலவுகூட சற்றுதடுமாறுகிறது
எனக்கு போட்டியாக
இவள் யாரென்று!

-003-

சூரிய உதயத்தை

உன் முகத்திலேயே
கண்டுவிடுகிறேன்
இரு புருவ மத்தியில்
பொட்டாக...!

-004-

நீ சிரிக்கின்றபோதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல இன்னும் 
எத்தனை பேரை பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று...!

-005-

உன்னால் மட்டும்

எப்படி சாத்தியமாகிறது
ஆயுதமே இல்லாமல்
கண்களுக்குள் ஊடுருவி
கனத்த என் நெஞ்சை
கவர்ந்திழுக்க!

-006-

உன் இருவிழி
தரிசனம் கிடைக்காத நாட்களில்
பட்டினியாகவேகிடக்கிறது
என் நெஞ்சம்...!

-007-

நீ கோபப்படும் நேரங்களில்
என்னை பார்த்து சிரிக்கிறது

நீ புன்னகைக்கும் நேரங்களில்
என்னை பார்த்து சண்டையிடுகிறது
உன் விழிகளுக்கும் இதழ்களுக்கும்
என்னவொரு முரண்பாடு!

- இரா.ச.இமலாதித்தன் காதல் புதிது!
-001-

காலைப்பொழுது கடந்தபின்னும்
சாலையோர பூக்களெல்லாம்
மலராமலே காத்துகிடக்கிறது
உன் வருகைக்காக!

-002-

உன்னை கண்டபின்தான்
சின்னஞ்சிறு வண்ணப்பூக்களும்
புன்னகையை சிதறவிடுகிறது
என்னைப்போலவே!

-003-

உன்னை காணாத
நாட்களெல்லாம்
என் நாட்காட்டியில்
முடியுறாமலே
முழுமையற்று கிடக்கின்றன
நாட்கள் அனைத்தும்!

-004-


நீ என்னை
கடந்து செல்லும்
நேரமெல்லாம்
என் கடிகார முட்களும்
கண்ணடித்து சிரிக்கின்றன
வந்துவிட்டாள் தேவதையென்று!

-005-

நீ
யாரென்றே தெரியவில்லை
இருந்தாலும்
உன்னை நினைத்தே
காகிதங்களில்
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
கவிதை என்றார்கள்!

-006-

உறங்கா இரவுகளில்

உன்னிடமே
பேசிக்கொண்டு இருக்கிறேன்
படுக்கையறையில்
தன்னந்தனியாய்!


- இரா.ச.இமலாதித்தன்