வாடகை வீடு!

யாரோ ஆண்டவனாம் 
சிலகாலம் மனிதர்களோடு 
வாழ்ந்துவிட்டு போகலாமென 
பூமிக்கு வந்திருப்பதாய்
விடிகாலை கனவில் வந்து 
நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;
அவனைத்தேடி நான் போக எத்தனிக்க 
வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன் 
வாடகைக்கு வீடுத்தேடி 
விசாரித்து கொண்டிருந்தான்;
நான் காலி செய்த வீட்டையே 
அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று; 
வணக்கம் வைத்து வரவேற்று 
அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்!

வள்ளுவனே வாடகைக்கு குடிபுகுந்தால்
குறளில் சொல்லாத நான்காம் அதிகாரம் 
அவனையும் சோதித்து பார்க்கலாம்;     
அறம் பொருள் இன்பத்தோடு  
வீடுபேறே கிடைத்தாலும் 
சொந்த வீடில்லாமால் வாழ்வது வீண் 
என்றிருப்பானென்றேன்;
மறுதலிப்பு ஏதுமில்லாமல் 
என்னை பார்த்து புன்னகைத்தான் அவன்!
 
விலை நிலங்களெல்லாம் மனைகளாவதற்கு  
வாடகை தந்தும் வசவுகளை வாங்கும் 
இடைநிலை குடும்பத்தினருக்கு   
சொந்தமாய் ஒரு வீடு இல்லாததுதான்
காரணமாய் இருந்திருக்கலாமென்றேன்;
ஒன்றுமே சொல்லவில்லை அவன்
தலையை கூட சற்று தாமதமாகவே ஆட்டினான்!

ஆண்டவனாகவே இருந்தாலும்
வீட்டு உரிமையாளரிடம் 
அடிபணிந்துதான் போகவேண்டுமென்றேன்;  
இதுபோல பல இலவச அறிவுரைகளை 
கேட்டுக்கொண்டிருந்தவன்  
வெகுநேர மௌனத்திற்கு பிறகு
பேச தொடங்கினான்; 
நானே ஆண்டவன் தானென்றான்!
நாரதன் சொன்னது நினைவுக்கு வந்தது 
ஆச்சரியத்தோடு அவனை பார்த்து  
கட்டியணைத்து ஆறுதல் சொன்னேன்
விதி வலியதென்று!

கண்கள் விழித்து பார்த்தேன் 
இப்போதுதான் கனவு முடிந்திருக்கிறது போல;   
உண்மையிலேயே வாசலுக்கு வெளியே 
யாரோ காத்துக்கொண்டிருப்பது போலிருந்தது; 
ஒருவேளை அவர்  
வாடகை வசூலிக்க வந்த 
வீட்டு உரிமையாளராக இருக்கலாம்! 

- இரா.ச.இமலாதித்தன்