காதல் தேவதை!-001-

பறவைக்கு மட்டும்தான்
சிறகுகள் உண்டா என்றாள்;
தேவதைக்கும் உண்டு
உன்னைபோன்ற சிலர்
விதிவிலக்கென்றேன்;
கேட்காமலேயே கிடைத்தது!

-002-

மின்மடலின் கடவுச்சொல்
என்னவென்றாள்;
தேவதை என்றேன்...
என்னென்னமோ
யோசித்துக்கொண்டிருந்தாள்
அவளது பெயரை மறந்துவிட்டு!
 

-003-

காதல் என்னவென்றாள்
என்னை நீ
புரிந்துகொள்ளென்றேன்
இன்னும் கிடைக்கவில்லை
அவளுக்கான பதில்!

-004-

நமக்குள் நட்பு
எப்படி உருவானதென்றாள்
சிரித்தேன்;
மறந்துவிட்டதாய் சொல்லி
நினைவுப் படுத்தினாள்;
மறுமுறையும் சிரித்தேன்
மீண்டுமொருநாள் நினைவுபடுத்த
புதுக்காதல் இருப்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

நடுநிசி நிகழ்வுகள்!ஏதோவொரு இலக்கை நோக்கிய
ஆழ்ந்த இரவின் கரங்கள்
வெகுதொலைவில் நீண்டு கொண்டிருக்கிறது...
கண்களுக்குள் அகப்படும் உருவங்கள்
தனக்கான அடையாளங்களை உதறிக்கொண்டு
அமீபாவாய் உருமாற ஆயத்தமானது;
செப்பனிடாத குறுஞ்சாலை நடுவே
தென்பட்ட பள்ளங்களிலெல்லாம்
தேங்கி நின்ற தண்ணீருக்குள்
நிலவும் நீந்திக் கொண்டிருந்தது;
வெயிலின் தாக்கம் அனைத்தையும்
வெகுநேரமாய் உள்வாங்கிக்கொண்டிருந்த
சாலையோர மரங்களனைத்தும்
சற்றுநேரம் உறங்கிக்கொண்டிருந்தன;
பலவருடங்களாய் பூமியில் சேமிக்கப்பட்ட
புதையலின் குவியல்கள் சுரண்டப்பட்டு
வறண்டு கிடந்த ஆற்றின் நடுவே
அடையாளங்களாய் காட்சிக்கு விடப்பட்டிருந்தன;
உறக்கம் தொலைத்த ஒவ்வொரு இரவுக்குள்ளும்
நாய்களின் கூச்சலுக்கிடையே குறட்டை சத்தங்களும்
நிசப்த நாழிகையின் உயிர்நாடியை
நிறுத்த முயல்கின்றன;
இப்படி ஏதோவொரு நிகழ்வுகள்
நடுநிசி பொழுதுகளில் பயணிக்கும்
எல்லா நாட்களிலும்
கடந்து மறைகின்றன நாளைய விடியலோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் அதீதம் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மரணங்கள் முடிவதில்லை!


 

உன்னைவிட்டு பிரியப்போவதாய்
உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று சிலிர்த்துக்கொண்டு
மறுமொழி ஏதும் சொல்லாமல்
மௌனத்தை மட்டுமே
முழுவதுமாய் பரவச்செய்து
புன்னகையை தவழ விட்டதும்
குழம்பி நிற்கிறது உடல்;
பிரிதலை ஏன் சொன்னோமென்று
உடனடியாய் தன்னிலை மாறுதலாக்கி
மௌனத்திலேயே லயித்திருக்க முடிவுசெய்து
தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி
சூழ்ந்த அமைதியை கலைக்காமல்
ஆழ்ந்து நீடித்திருந்தது உயிர்;

கடைசிநேர பரிவர்த்தனையாய்
ஏதேதோ செய்யலாமென முயன்றும்
தோல்வியடையப்போவதை
உணர்ந்திருந்த உடலும்
இத்தனை நாட்களாய்
உடன்பிறப்பாய் உள்ளிருந்த
உறவின் தவக்காலம் முடிந்து
பயணப்பட ஆயத்தாமாயிருந்த
அழிவில்லா ஆன்மாவை 

வழியனுப்பி வைத்தது
முடிவில்லா மரணத்தால்!


- இரா.ச.இமலாதித்தன்

சாதிப்பிழை!சாதிகள் இல்லையென்று
எழுத்துகளால் உரைத்தவனை
கவிஞன் என்றான்;
சாதிமத பேதம் இல்லையென்று
மேடையில் முழங்கியவனை
தலைவன் என்றான்;
சாதீய மாயையென்ற
சமுதாயப்பிழை உருவாக
கருவானவனை மட்டுமேன்
இறைவன் என்றான்?
இந்தகேள்விகளோடே
தினந்தோறும் நுழைகின்றான்
கோயிலுக்குள் அவன்!

- இரா.ச.இமலாதித்தன்