ஏமாற்றம்!சூட்சமத்தால் சூழப்பட்ட
ஆழ்மனத்தின் வேர்களுக்குள்
முன்பைவிட முழுவீச்சோடு
ஊடுருவிக் கொண்டிருக்கிறது
குழப்பத்தினால் பின்னிப் பிணைந்த
நினைவுகளின் சுவடுகள்!

சிதைக்க முடியாதென
நெஞ்சுக்குள் கட்டியெழுப்பிய
அசைக்கமுடியா நம்பிக்கையும்
தூள்தூளாய் நசுக்கப்பட்டு
துயரத்திற்குள் தூக்கி எறியப்படுகின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்...
கணப்பொழுதில் வெடித்து சிதறி
காணாமல்போகும் நீர்க்குமிழிபோல.
நிர்கதியான மனதைவிடுத்து
நினைவுகளும் நிர்மூலமாய்
சிதற தொடங்குகிறது!

சற்றே சுயமாய்
சுதாரித்துக்கொண்டு
தன்னை சூழ்ந்துகிடக்கும்
சுகவீனமற்ற நிலையை
துடைத்தழிக்க முற்படும்
அந்தவொரு நொடிப்பொழுதில்
ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு
மரண ஒத்திகைக்கு
ஆயத்தமானது மனது!

- இரா.ச.இமலாதித்தன்

தேர்தல் முதலீடு!
பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!

எங்களின் பலம்கொண்ட
பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம் தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு!

சோறள்ளி உண்பதற்கும்
சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு!

எவன் வென்றால் நமக்கென்ன
எதிர்கொள்ள தேவையென்ன?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு...!

- இரா.ச.இமலாதித்தன்இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


ஜனநாயக ஆசியம்!தன்னுள்ளே தவறென்று
இனம்காட்டும் உள்ளத்தை
இடைமறித்து கொன்றாலும்
வருடத்திற்கு ஒருமுறையென்று
இடை சொருகளாய் வந்துசெல்லும்
இடைத்தேர்தல்களில்
பணம் வாங்கி வாக்களிப்பதை
மன்றாடி எதிர்த்து பார்த்து
மரணித்தே போய்விடுகிறது
மறத்து போன மனசாட்சி!

என் வீட்டில் மூன்றென்று
ஒன்றுக்கு நூறென்று
மொத்தமாய் முந்நூறை
முன்பணமாய் விலைபேசி
தன்வாக்கு தலைவனுக்கேயென்று
பசும்பாலில் கைவைத்து
சத்தியமும் செய்து கொடுத்து
வாக்களிக்கும் வாக்காளனால்
ஆசியமாய் போனது ஜனநாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

அவள் முகம்!இரு பாதங்கள் படிய
நான் கடந்து போகின்ற
சாலைகளின் பாதையெங்கும்
என் கண்ணெதிரே
தென்பட்ட உருவமெல்லாம்
பிரதிபலிக்கிறது உன் முகத்தை!

இதுநாள் வரை உன்னைநான்

பார்க்கவே இல்லையே...
இருந்தபோதிலும்
காண்கின்ற எல்லாமும்
கவித்துவமாய் என் கண்களுக்கு
காட்சி தருகின்றனவே
கவிதைதான் உன்முகமோ?

மூன்றைந்து நாட்களுக்குள்

முகம் மறைக்கும் நிலவைப்போல்
என்னுலகில் தோன்றவேண்டிய
எனக்கான வளர்பிறையே
எப்போது முகம் மலர்வாய்?

உன் நிழலைக் கூட காணமுடியாமல்

உன் முகத்தை அனுதினமும்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு பிடித்த ஒன்றைப்போல்
உனக்கானதொரு
புத்தம்புது உருவத்திற்குள்
என்னுயிரை பகிர்ந்தளித்து!

- இரா.
ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

காதல் என்பது?_____________________

001.


உன்னிடம் சொல்லநினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!

_____________________

002.


ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்...!

_____________________

003.


ஒரு சிலருக்கு
கல்லறை
வேறு சிலருக்கு
கோவில் கருவறை
காதல்...!

_____________________

004.


புனிதம்
என்ற சொல்
பூர்த்தியானது
காதலை
தியாகம் செய்யும்போது...!


- இரா.ச.இமலாதித்தன்

பெண் தமிழ்!


உயிர்த்தமிழே
உன்னை பெண்ணென்றே
உருவகப்படுத்திக்கொண்டேன்...!
தமிழமுதத்தை எனக்களித்து
தமிழில் தட்டுத்தடுமாறி
தவழ்ந்த என்னை
நடை பயிலவைத்தாய்;
நடமாட தெரிந்தபின்னே
என்னுள்ளும் உரையாடி
பலகோடி மைல்களுக்கப்பால்
மிகவிரைவாய் நான் ஓட
வழிசெய்து எனக்கானதொரு
சரியான இடத்தை
பரிசளித்து தோழியானாய்!
உன்னையே சுவாசிப்பதால்
பலரால் வாசிக்கப்பட வைத்தாய்
ராதை கடவுளை மணமுடிக்கும்போது
உலகாளும் இறைவியே
நான் உன்னை மணம்கொள்ள முடியாதா?
இறவா தமிழாய் நீ
இறக்கும்வரை தமிழனாய் நான்
இது போதும் நமக்கான சாதக பொருத்தம்
இப்போது நீ சொல்
எப்போது என் மனைவியாவாய்?

- இரா.ச.இமலாதித்தன்