யார் கடவுள்?


நானும் நீயும் யாரென கேட்டேன்
மனிதன் என்றாய்...
அதுவும் அவையும் ஏதேன கேட்டேன்
மிருகம் என்றாய்...
எதுதான் உனக்கான வரையறையில்
இறைவன் என்றேன்...
உனக்கு தெரியாதாவென்று
எனக்கான பதிலை
என்னிடமே சொல்லேனென்றாய்;

மனதை அறிவால் குவித்து
மனித மிருக பாகுபாடற்ற
இயல்பே இறைவனென்றேன்;.
இங்கே இயல்பென்பதே
எதுவென்று தெரியாத போது
இறைவனை எங்கே தேடுவதென்றாய்?

அந்த தேடலே மார்க்கம் என்றேன்;
மதத்தை பிடித்தவருக்கு
தன்மனதை அடக்கத் தெரியாதபோது
மார்க்கத்திலும் மாற்றம் வருமென்றாய்;
மதம் மார்க்கம் என்பதெல்லாம்
மனம் மாற்றத்தில்தான் உள்ளதென்றேன்;
தடுமாறும் உள்ளங்களனைத்தும்
நிலைமாறும் ஒருநாள்
இறைகூட மாறுமோ யென்று
கேள்விகளுக்குள்ளேயே பதிலை தேடினேன்

இறைவனோ
மெளனமாய் என்னுள்
சிரித்துக்கொண்டிருக்கின்றான்!

- இரா.ச.இமலாதித்தன்