நீ கடவுளில்லை!


துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது
எதிர்கால வாழ்வியல்!
உன்னாலேயே உருவாக்கப்பட்டது
உனக்கான எல்லைகள் - அது
விரிவடைந்து விட்டதாகவே
கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்!

நீ இரவலாய் வந்த வெற்றுடல்
புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி;
குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்
உடலால் சிலரை வென்றாலும்
உன் காலடி யாருக்கு சொர்க்கம்?

பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்
சிலருடல் அடிமைசாசனம்!
நீ மதம் கொண்ட மானுடம்
ஆன்மீகம் உன் ஆறுதல்
பலர் மனம் கொன்ற வெண்ணுடல்;
உன்னை கட்டுப்படுத்த
கேடயமென்ற ஆயுதம் வீண்
புரிந்து கொண்டோம்;
தன்னையே அழித்துக் கொள்ளும்
நீ ஆணவத்தீ !

பிழை செய்து கொண்டே
பெரும்துரோகம் செய்கின்றாய்
உன்மீதான மாயை 
புகழ் பதவி உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்;
அதன் பின்னும் 
உனக்கும் சில நினைவேந்தல் நிகழ்வு
ஊருக்கொன்று நடைபெறும்
ஆனாலும் நீ கடவுளில்லை! 


- இரா.ச.இமலாதித்தன்