என் தோழா!

கனரக ஆயுதங்கள் பலகொண்டு
அய்யோவென்ற அலறலும்
அழுகுரலும் கொடுத்திட்ட
எந்தமிழினம் அனைத்தையும்
கணப்பொழுதில்
உயிரோடே மண்ணோடு
மரணக்குழியில் புதைத்தவனை
தோலுரிக்க உன் தோள்கொடு என் தோழா!

வீடற்று வீதியற்று நாடற்ற நாடோடிகளாய்
நடமாடக்கூட முடியாமல் -
எந்தமிழன் நாதியற்று
முட்கம்பிகளுக்குள் மூச்சை மட்டும்
முழுவேளை உணவாக உட்கொண்டு
உயிர் மட்டும் உள்ளவனாய்
முடங்கி கிடப்பவனை முடுக்கிவிட
முயற்சியெடு என் தோழா!

உணர்வற்ற நம்மக்கள்
உணர்ச்சியற்ற உன்தோள்கள்
இவ்விரண்டும் புத்துணர்ச்சிபெற
புதுவழி கண்டிடு என் தோழா!

வன்மம் கொண்ட வன்முறை வெறியனை
இல்லாதழித்தொழித்து
என்மக்களின் துயரங்களை துடைத்தழிக்க
விருட்சமாய் ஒன்றிணைய
உன் இருகரம் கொடுத்திடு என் தோழா!

என் தமிழினம் கொன்று சுகம் காணும்
பிணந்தின்னி இனவெறி கூட்டத்தை
இனங்கண்டு பகை முறிக்க
புறப்படு என் தோழா!

புரிதல் கொண்டு புரட்சிகள் வெடிக்கும்
அதுவரை புலிகளாய் பதுங்கி
பொறுத்திரு என் தோழா...
பாயும் நாட்கள் வெகு தூரமில்லை
அப்போது களத்திற்கு
போராட வந்திடு என் தோழா!

- இரா.ச.இமலாதித்தன்

"என் தோழா" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.