அவளோடு அருகில்!
-01-

உன்னருகிலேயே வாழ்நாளெல்லாம்
இருந்து விட்டால் போதும்;
சொர்க்கம் என்ற ஒன்றே பொய்யாகி போகும்.
நீயும் நானும்
இங்கேயே புதுக்கடவுளாகி போவோம், வா!

-02-

நீ எது சொன்னாலும் அது பெருங்கவிதை;
உன் உதடுகள் வழியே
உதிரும் வார்த்தைகள், புது இலக்கியம்;
நீ என் தாய்க்கு மட்டுமமல்ல;
தமிழன்னைக்கே மருமகள்!

-03-

ஒவ்வொரு நாளும் என் உடலுக்கும்
உயிருக்குமான உறவை,
உன்னால் தானே உயிர்பித்து கொள்கிறது மனது;
என் அனுமதி இல்லாமலேயே
எப்போது நீ என்னுயிரானாய்?!

-04-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-05-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் அருகருகே
உரசாமலேயே பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

- இரா.ச.இமலாதித்தன்