விழுங்கப்பட்ட அன்பு!


காதலால் நான் உன்னை
மணம் செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மனதை மறுத்து
உன்னை மட்டுமே நினைத்து
உயிர் துடிக்க முயலுகின்ற
ஒவ்வொரு நொடிகளுக்குள்ளும்
பலகோடி விதைகளாய்
ஆழ்மனதில் விழுங்கப்படுகிறது
நம்மிருவரின் அன்பு!

விலகிச்சென்ற அன்பால்
சிதைவடைந்த செந்தளிர் நாட்களும்
விளைச்சலாய் வெளிப்பட்டு
விருட்சமாய் வெளிக்கொணரும் காலங்களில்...
தனிமையால் வெறுமை சூழ்ந்து
செழிப்பிழந்து செயல்படாமல்
தடுமாறி கிடக்கும்போது
என்குழந்தையின் பெயராய் நீயும்
உன்குழந்தையின் பெயராய் நானும்
அறுவடைசெய்திருப்போம்
விழுங்கப்பட்ட அன்பை!

- இரா.ச.இமலாதித்தன்