விதைகளெல்லாம் விருட்சமாகும்!முப்படைகளோடு களமாடியும்
முதுகோரம் துரோகத்தின் உச்சம்;
எதிரேழு நாடுகளின் சூழ்ச்சியால்
முடக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்;
இனவழிப்பின் அடையாளமாய்
இங்கே நினைவு முற்றம்;
மெளனித்திருக்கும் ஆயுதங்களால்
உளவியல் தாக்குதலில்
வற்றி போனது நந்திக்கடல்;
காரிருளில் நட்சத்திரங்களாக
கரும்புலிகளின் காட்சிகளுக்கிடையே
நிச்சயமொரு நாள்
விதைகளெல்லாம் விழித்தெழுந்து
திரிகோணமலையெங்கும்
விருட்சங்களாக வளர்ந்து நிற்கும்!

- இரா.ச. இமலாதித்தன்


(எங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி!)

நானும் நீ!
இத்தனை வருடங்களில்
எத்தனை முறை இதே தேதியை
கிழித்தேனென தெரியவில்லை;
பனிரெண்டு எண்களுக்குள்ளான
நெடுந்தூர ஓட்டக்களத்தில்
ஆரம்பித்த இடம் தெரியாமல்
ஆரம் போல சுற்றிக்கொண்டிருக்கும்
கடிகார முட்களோடு முட்டி மோதி
கோடிக்கணக்கான நாழிகைகளை
என்னுள் விழுங்கிருக்கிறேன்;
இரவும் பகலும் கடந்த
ஒவ்வொரு பொழுதுகளிலும்
ஏதோவொரு கனவுகளோடு
எதையெதையோ தொடர்பு படுத்தி
என்னையே தொலைத்திருக்கிறேன்;
வரையறையற்ற காலமெனும்
நிர்ணயிக்க முடியாத மாயைக்குள்
நிரந்தரமில்லாத இவ்வாழ்க்கைக்காக
யாராகவோ தான் உருமாறி கிடக்கிறேன்;
இவையெல்லாம் நிச்சயம் நானல்ல
முடிவிலியான காலம்
இன்று நானாக இருக்கிறது;
நேற்றோ நாளையோ
நீங்களாக கூட இருக்கலாம்!

- இரா.ச. இமலாதித்தன்