அன்பே சிவம்!



தலையில் தேங்காய் உடைப்பதையும்
பச்சிளம் குழந்தையை நெஞ்சினில் மிதிப்பதையும்
பார்த்து பக்தி பரவசமடையும் பாவப்பட்ட மனிதா- நீ
ஆண்டவனை திருப்தி படுத்துகிறேனென்று - போலி
ஆன்மீகத்தில் அடிமைப்பட்டு கிடக்கின்றாய்!
வாயிலிருந்து லிங்கம் எடுத்தவனையெல்லாம்
சிவனோடு ஒப்பிட்டு பழகிவிட்டாய்
மாயம் செய்யும் மந்திரவாதியெல்லாம்
ஞானம் தெளிந்த ஆன்மீகவாதியாய்
வேடம் போடும் நாட்டுக்குள்ளே - அவனை
வீணாய் நம்பி மதிகெட்டு நிற்கின்றாய்!
காவி உடுத்தியவனெல்லாம் உனக்கு
கடவுளாக தெரிந்து தொலைக்கிறானோ
உனக்குள்ளேயே எல்லாமும் இருப்பதை மறந்து
எவனோவொருவனின் காலை வருடுகிறாய்
மூளை உள்ளவன் தானே நீ
மூடநம்பிக்கையில் ஏன் முடங்கிக் கிடக்கிறாய்?
கடவுளென்று ஒன்றே இல்லையென்று
சொல்லி திரியும் கூட்டமும் கூட
இல்லாத இறைவன் இங்கே இருந்தால்
நல்லதென்றே சொல்கிறோமென்று
உரைக்கும் காலமிங்கே கனிந்து கொண்டிருக்க - நீ
கண்கட்டு வித்தைகளுக்கெல்லாம் விலைபோனால்
ஏமாற்றப்படுவதுதான் உனக்கான விதிப்பலன்!
பசியென்று கையேந்திவரும் வயோதிக கிழவனுக்கும்
உன்னைத்தேடிவரும் தகுதியுள்ள ஓர் இளைஞனுக்கும்
உதவி செய்ய மறுக்கும் மனவூனமுள்ள நீ
கோவிலின் உண்டியலில் கோடிக்கணக்கில் பணமும்
எடைக்கு எடை தங்கமும் தந்தென்ன லாபம்?
இறைவனை தேடி அலையும் உன் நெஞ்சுக்குள்
அன்பென்ற ஈரம் வறண்டு போய்விட்டதே - நீ
கோவில் குளங்கள் எங்கெங்கு சுற்றினாலும்
அன்பே சிவனென்று அறியாத வரை
போலி ஆசாமிகளால் முடக்கப்படுவாய்
பலவீனமான பக்தனாய்!

- இரா.ச.இமலாதித்தன்