யார் கடவுள்?


நானும் நீயும் யாரென கேட்டேன்
மனிதன் என்றாய்...
அதுவும் அவையும் ஏதேன கேட்டேன்
மிருகம் என்றாய்...
எதுதான் உனக்கான வரையறையில்
இறைவன் என்றேன்...
உனக்கு தெரியாதாவென்று
எனக்கான பதிலை
என்னிடமே சொல்லேனென்றாய்;

மனதை அறிவால் குவித்து
மனித மிருக பாகுபாடற்ற
இயல்பே இறைவனென்றேன்;.
இங்கே இயல்பென்பதே
எதுவென்று தெரியாத போது
இறைவனை எங்கே தேடுவதென்றாய்?

அந்த தேடலே மார்க்கம் என்றேன்;
மதத்தை பிடித்தவருக்கு
தன்மனதை அடக்கத் தெரியாதபோது
மார்க்கத்திலும் மாற்றம் வருமென்றாய்;
மதம் மார்க்கம் என்பதெல்லாம்
மனம் மாற்றத்தில்தான் உள்ளதென்றேன்;
தடுமாறும் உள்ளங்களனைத்தும்
நிலைமாறும் ஒருநாள்
இறைகூட மாறுமோ யென்று
கேள்விகளுக்குள்ளேயே பதிலை தேடினேன்

இறைவனோ
மெளனமாய் என்னுள்
சிரித்துக்கொண்டிருக்கின்றான்!

- இரா.ச.இமலாதித்தன்

எனக்கொன்றும் தெரியாது!



திருவிழாக்கால நெரிசல்களில்
நான் தரிசிக்க முடியாத நம் குலசாமியை
நீ தவழ்ந்து நடந்த
பால்ய வயது பருவக்காலங்களில்
என் தோள்மீது உன்னை சுமந்து
உன் கண்கள் வழியாக
வழிபட்ட போதும்

எனக்கொன்றும் தெரியாது!

பள்ளி சென்று திரும்பாத
மாலைப்பொழுதுகளில்
படபடப்போடு
உன்னை வாரியணைத்து
உனக்கான வீட்டுப்பாடங்களை
நான் முடித்து கொடுத்து
உன் அச்சத்தையும்
கண்ணீர் துளிகளையும்
துடைத்தெறிந்த போதும்

எனக்கொன்றும் தெரியாது!

உன் கல்லூரிக்கால கட்டணங்களை
அக்கம்பக்கம் அலைந்துதேய்ந்து
வட்டிக்கு கடன்பட்டு
கடைசி நாளில்
கல்லூரி அலுவலர்களின்
வசைச்சொல்லை வாங்கிக்கொண்டு
உனக்கான பணத்தை செலுத்தியபோது
முகத்தை மட்டும் சிரிக்க
பழகிக்கொண்ட போதும்
எனக்கொன்றும் தெரியாது!

வருடங்கள் கடந்த பின்னே
நீயே பின்பொரு நாள்
இதை என்னிடமே சொல்லிவிட்டு
ஏளனம் செய்வாய் என்பதை பற்றி
இப்போதுதான் உணர்கிறேன்
எனக்கொன்றும் தெரியாது!

- இரா.ச.இமலாதித்தன்

நிழலும் நீயே!




ஆளரவமற்ற மதியநேர பயணத்தின்
அரங்கேறிய ஆகாய மார்க்க
ஆதித்த தாண்டவத்தில்
அல்லல் பட்டுக்கொண்டே
அவசரகதியில் கால்களிரண்டும்
நகர்ந்து கொண்டிருக்க;
நீண்ட நெடுந்தொலைவில்
என் தாயைப்போல் ஒருத்தி
என்னை இளைப்பாற்றி அரவணைக்க
அழைப்பு விடுக்கிறாள்
ஒற்றைக்காலோடு
நிழல் தரும் மரமாய்!

- இரா.ச.இமலாதித்தன்

விழிகளில் ஒரு கனவு!




உணர்வற்ற நடுநிசி தருணங்களிலும்
அதிகாலை முனகல்களிலும்
என்னை நானே வெற்றிக்கொள்ள;
எனக்காகவே போரிட்டுக் கொள்வதும்
என்னையே நானே போரிட்டுக் கொல்வதும்
உணர்வற்ற காட்சிப்பதிவுகளாய் அரங்கேற;
நான் நானாகவே நாயகனாக
புத்தம்புது அவதாரமாய் உருவெடுத்து
என்னால் என்னையே எதிராளியாக வீழ்த்தப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
எதிர்ப்படும் நிகழ்வுகள் அனைத்தும்
காட்சிப்படுத்தி பதிவாக்கப்படும்போது
அந்தரங்க சாட்சியங்கள் யாவும்
பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறியுமோயென்ற
அச்சத்தோடே அரங்கேறிக்கொண்டிருக்கிறது
விழிகளுக்குள்ளே கனவும்!

- இரா.ச.இமலாதித்தன்

நீயில்லாத போது!



வானோடு நீலமும், 

காடோடு பசுமையும்
நிலத்தோடு மஞ்சளும், 

நிலவோடு வெண்மையும்
இரவோடு கருமையும், 

தீயோடு சிகப்புமாய்
ஏழு வண்ணங்களோடு
எல்லா திசைகளும் 

பல வண்ணங்களாய் சிதறிக்கிடக்கும் 
இவ்வேளையில் கூட
நிறங்கள் அனைத்தும்
வண்ணங்களற்று 

வெறிச்சோடி கிடக்கிறது
என்னருகில் நீயில்லாத போது!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் சேமிப்பு!


தோல்வியின் புன்னகை
வெற்றியின் கண்ணீர்
நண்பனின் உந்துதல்
எதிரியின் போர்க்குணம்
இதுபோல இன்னும் ஏராளமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்கான என் நெஞ்சுக்குள்
பின்னொருநாளில் உன்னிடம் காண்பிக்க!


- இரா.ச.இமலாதித்தன் 

பிச்சை பாத்திரம்!



குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
பிராதன சாலையோரம்
பயணிக்கும் நேரமெல்லாம்
பிச்சைகேட்டு கையேந்தும்
மழலைகளின் கரங்களுக்குள்
உறங்கி கிடக்கிறது
ஆதரவற்ற அனாதையாய்
பொருளாதாரம்!

- இரா.ச.இமலாதித்தன்

தன்னந்தனியாய்!



தனிமைகள் அனைத்தும்
ஒருமித்து நிரம்பிவழியும்
எண்ணிக்கையற்ற நொடிகளுக்குள்...
சின்னஞ்சிறு அறையினுள்ளே
புதைக்கப்பட்டும்,
புதியதாய் உருவெடுக்கும்
ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும்
வட்டமிடுகிறது கோரமுகம்!

- இரா.ச.இமலாதித்தன்