சுவரொட்டி!

அரசாங்க மதுக்கடையோரம்
நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளண்டர் பைக்கில்
’ஏ1பி பாசிடிவ் இரத்தம்
தேவையெனில் தொடர்பு கொள்க’ யென்ற
வாசகத்தின் கீழே கொடுப்பட்ட
பத்தெண்களில் ஏழெண்களில்லை,
கடைசியாக நூற்றி அறுபத்திரெண்டு மட்டும்
அழைக்க மீதமிருந்தது;

அதே பைக்கில் மாட்டிருந்த
வழிந்து நிரம்பிய மைதா வாளியை
கையிலெடுத்த கையோடு
சரட்டென வீறிட்டு சென்றவர்கள்
’தேவி திரையரங்கம்’ அருகிலிருந்த
திருமண மண்டப சுவர்களிலெல்லாம்
‘வாழ்த்தலாம் வாங்க;
அடுத்த மாப்பிள்ளை நாங்க’யென்ற
வாழ்த்து சுவரொட்டிகளை
’மெர்சல்’ நூறாவது நாளில்
ஒட்டிக்கொண்டிருந்தனர்;

நண்பகலில் நடைபெறும் திருமணத்தில்
ஒரே மாதிரியான வேட்டிச்சட்டைகளோடு
ஆண்ட்ராய்டு போன்களில் செல்ஃபி எடுத்து
அட்சதை போடும் நேரத்திலேயும்
‘ஃபேஸ்புக் லைவ்’வில் பரபரப்பாயிருந்தும்
இரவில் தீர்ந்தவற்றை வாங்கிவர
மதுக்கடைக்கு பறந்தனர்
மாப்பிள்ளை தோழர்கள்;

இரவில் ஒட்டியிருந்த
சுவரொட்டிகளையெல்லாம்
பசும்புல் போல பசுக்களனைத்தும்
சுவைத்துண்பதை பார்த்து
அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கிய
அண்டை திராவிட மாநிலமும்,
பசுமை நிலங்களை மீத்தேனால் பாழாக்கிய
பசுக்காவலர்களின் அகண்ட தேசமும்,
நம்மை மட்டுமல்ல,
இம்மண்ணையும் உயிர்களையும்
அடிமைகளாக பழக வைத்திருக்கும்
அரசக் கதைகளையெல்லாம்
தெளிவில்லாத நிலையிலும்
ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள்;

கிழித்தெறியப்பட்ட சுவரொட்டியின்
கழுத்தில் மாலையோடு ஜோடியாக இருந்த
தன் நண்பனின் படமிருந்த இடத்தில்
பின்னாலிருந்த யாரோ ஒருவனின்
‘கண்ணீர் அஞ்சலி’ சுவரொட்டியின்
படமும் பெயரும் அமைந்திருந்ததை
கவனிக்க தொடங்கும் வேளையில்
’சீக்கிரம் வாங்கடா,
கடிநெல்வயல் வேம்புடையார் கோவிலுக்கு
போகணுமாம்’ என்ற
மணவறையிலிருந்து வந்த
அலைபேசி அழைப்பால்
அவசர அவசரமாய் பறந்து போனார்கள்;

இதற்கிடையே
பாசக்கார பங்காளிகளின் குரலொலியில்
’கூலிங்கே இல்லையாம் பங்கு?!’
’இருக்கிற டென்சனுக்கு,
ஏதோ ஒன்னு வாங்குங்க பங்கு’
என்ற சோகத்தோடு
முப்பதாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த
சிவக்குமாரும் எழிலரசும்
அதே சுவரொட்டியை பார்த்து
’அவ இன்னொருத்தனுக்கு
பொண்டாட்டியாவே ஆய்ட்டா;
நம்ம பங்காளியை ஏமாத்துனவ
நல்லாவா இருக்க போறா?’வென
மனம் நிறைய சுமையோடு
மயானக் கரைக்கு செல்லும் நேரத்தில்,

அடுத்த சுவரொட்டியை
அதன்மேல் வேறாரும் ஒட்டும்வரை
இந்த சுவர்களிலாவது
இணைந்திருக்கட்டுமென
பசுக்கள் கூட பசியாறாமல்
காத்திருக்கும் இடைவெளியில்
’பாரத் மாதாகி ஜெ!’ என்ற சுவரொட்டிகள்
அவர்கள் இருவரையும் பிரித்த நொடியில்
அந்த சுவரொட்டியை மட்டும்
ஈரம் காய்வதற்குள் லாவகமாய்
வெடுக்கென கிழித்து திண்றது
கொம்புடைந்த பசுவொன்று!

- இரா.ச. இமலாதித்தன்

Post a Comment

No comments:

Post a Comment