பச்சையும், மஞ்சளுமாக
 நாளுக்கொரு 
 வண்ணங்களில் பூத்திருக்கும் 
 மலர்களின் பெயரை 
 யோசித்து கொண்டிருந்தேன்; 
 உன் விரல்களை விட்டு 
 விலகிய நகங்களில் 
 பூசப்பட்டிருக்கும் பேரழகிற்கு 
 என்ன பெயர் வைப்பதென?! 
- 
இயல்பை தொலைத்த
 இவ்வாழ்வே
 என் ஊழென தெரியாது;
 உன்னிரு விழிகளின்
 இமைக்கா நொடிகளில் 
 ஒவ்வொரு முறையும்
 தப்பி பிழைத்து
 ஒரேயடியாய்
 விழுந்து கிடக்கும் 
 என் தற்செயல் நிகழ்வுகளை 
 மீட்டுக்கொடு; 
 இனியாவது 
 நானாக இருக்க முயல்கிறேன்! 
- 
அடிக்கடி அழைத்து பேசாத 
 நெருங்கிய உறவுகளின்
 விடிகாலை
 அலைபேசி அழைப்புகள் 
 ஏற்படுத்தும் பதற்றத்திற்கு 
இணையானதொரு நிலையை 
 உருவாக்கி கொடுக்கிறாய்;
 ஒவ்வொரு முறை 
 நீ என்னிடம் பேசும் பொழுதும்!
-
 உன்னிரு பார்வைக்கு
 ஆயிரம் கவிதைகள் எழுதலாம்;.
 எங்கே விடுகிறாய்?
 ஒவ்வொரு முறையும்
 பிறப்பெடுத்து இறக்கிறேன்;
 உன்னிலிருந்து 
 தப்பி பிழைப்பதே
 பெருந்தவமாய் இருக்கிறது;
 எப்படி எழுதி முடிப்பது? 
- 
வண்ணத்துப்பூச்சிகளின்
 மகரந்த தீண்டலில்லாத போது
 மிகப்பெரும் வனத்தின்
 சின்னஞ்சிறு பூக்களனைத்தும்
 பிரபஞ்ச தொடர்பின்றி 
 வண்ணங்கள் தொலைத்து
 தனித்து கிடப்பதை போன்ற
 வெறுமையை உணர்கிறேன்
 நீ அருகிலில்லாத நாட்களில்! 
- 
உன் கண் மையில் மையல் கொண்ட 
 என்னை தொலைத்து
 எங்கெங்கோ தேட வைக்கிறாய்,
 நீ இருக்கும் திசையே கிழக்கானது;
 நம்மிருவருக்குமிடையில்
 நீளும் இரவின் வெறுமை போதும்,
 ஆதித்த கதிர்களையே
 ஆதிக்கம் செலுத்தும் உன்னுலகில் 
 எனக்கான விடியல் எப்போது? 
- 
 நெற்றியில் பொட்டில்லை,
 சூரிய கிரகணமானது;
 புருவங்கள் உயர்த்துகிறாய்,
 வானவில் இரண்டானது;
 கொஞ்சம் முறைக்கிறாய்
 குளிர் நிலவும் சுடுகின்றது;
 மெல்ல சிரிக்கிறாய்,
 நட்சத்திரங்கள் உதிர்கின்றன;
 நீ எனக்கான தேவதை,
 விலகாமல் அருகிலேயே இரு;
 நமக்கானதொரு
 புது உலகையே படைக்கிறேன்! 
- 
உன் தரிசனமற்ற நாட்களில்
 போர்க்களத்தின் 
 இரைச்சலை உணர்த்துகிறது
 என் தனிமை;
 ஒற்றை நொடியில்
 உயிர் கொல்லும் ஆயுதம்
 உன்னிரு பார்வைகள்;
 உடன்படிக்கையெல்லாம் வேண்டாம்
 உயிரையெடுத்து போ
 நீயில்லாமல் 
 அது மட்டும் எதற்கெனக்கு? 
- 
மிச்சமிருக்கும் 
 மிகக்குறைந்த அளவிலான
 அலைபேசியின் மின்னிருப்பு போல
 உன்னை 
 நினைவுப்படுத்திக்கொண்டே 
 இருக்கிறது மனது;
 தொடர்புகளற்ற தொலைவில் 
 நீ இருக்கிறாய்! 
- 
வாயை மூடி
 புன்னகைக்க முயல்கிறாய்,
 உன்னிரு கண்களோ
 அப்பட்டமாய்
 சத்தமிட்டு சிரிக்கிறது;
 காட்சிப்பிழைக்கு 
 சாட்சியங்கள் ஏதுமில்லை,
 நீ மட்டுமே அங்கிருந்தாய்;
 உன் புன்னகைப்புயலில்
 சிக்கிக்கொண்ட 
 என்னை மீட்டெடுத்து 
 நிவாரணம் கொடு,
 கொஞ்சம் பிழைக்கிறேன்! 
- 
தன் வேர்களையே தேட மறந்த 
 மரங்களின் கிளைகளில் அமர்ந்து
 உயிரை கொத்தி தின்னும்
 பெருவெளி பறவைகளின்
 கூச்சலிடும் பேரொலிகளுக்கிடையே
 அடர்வனத்தின் சிறுவழி பாதை,
 வண்ணங்களனைத்தையும் தொலைத்து
 வியாபித்திருக்கும் வான்வெளி போல
 மனதிற்குள் விரிய தொடங்குகிறது;
 புகழெனும் பெரும்போதையில்
 என்னைத்தவிர எதையெதையோ
 தேடிக்கொண்டிருக்கிறேன்,
 முடிவுறா இப்பிரபஞ்ச பயணத்தில்
 நானென்பது மட்டுமே அங்கிருக்கிறது! 
- இரா.ச. இமலாதித்தன்