அவளோடு நான்!
















 






சிவப்பும் கருப்பும்
கோபித்துக் கொள்ளாதபடி
இரண்டுக்குமான இடைவெளியில்
வர்ணம் பூசிய வார்ப்பாய்
வடிவம் கொண்டிருந்தாள்
உடல் முழுதும்!
இத்தனை வருடங்களாக
தினமும் என்னை அவள்
பார்க்க தவறியதேயில்லை;
என்னை மட்டும் தான் அப்படி
பார்க்கிறாள் போல!
பால்ய கால நினைவுகளை
அசைபோட பரிதவிக்கும்
அவளது முகமெல்லாம்
விரவிக்கிடந்த பருக்களும்
விலகிக் கொண்டிருந்தன 
பதின்ம வயதை கடக்கும் போது!

அவளை கட்டித்தழுவும் ஆவலோடு
என்னை விடுவித்து 
வெளிவர முயற்சிக்கிறேன்;
தெறித்து கீழே விழ
ஆயத்தாமாகிக் கொண்டிருந்தன
பிடிமுனைகள்!
கட்டுண்ட பிடிப்பிலிருந்து
விடுதலையாகி தரையை தழுவி
முத்தமிட்டு கொண்டிருக்க;
அவளது பிம்பத்தை
பிரதிபலித்து கொண்டிருந்தன
கீழே விழுந்து சிதறிய
என் ஓவ்வொரு பகுதிகளும்!

இப்போது உடலை இழந்து

புத்துயிர் பெற்றுவிட்டேன்
சிதறுண்ட மிச்ச உடலை
அவளது கைகளாலேயே ஆரத்தழுவி
சேகரித்து கொண்டிருந்தாள்;
சட்டென்று குப்பை தொட்டியில்
வீசியெறியப்படுகிறேன் நான்!
இத்தனை நாட்களாய்
அடைப்பட்டு கிடந்த
வெறுமை சூழ்ந்திருக்கும் சுவற்றை
வெகுநேரமாய் பார்த்து
வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள்
ஆளுயர கண்ணாடியில்
இனி முகம்பார்க்க முடியாதென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான வரிகளை வாசித்துக் கொண்டே வரும் போது காட்சிகள் உடனே மாற்றி விட்டன...

கருத்துரையிடுக