காக்கைச் சிரிப்பினிலே!






பள்ளம் படுகுழி யெங்கும்
கருஞ்சிறுகற்களால் தாரூற்றி பூசப்பட்டு
சாலையெங்கும் பளபளப்பாய்
படர்ந்து கிடக்கிறது!
நகரமெங்கிலும் சாலையோரம்
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்
பதற்றத்தோடு பரிதவித்து
காவல்துறை காத்துக்கொண்டிருக்கிறது!


முக்கியச்சாலையின் முச்சந்தியில்
முகமுடல் முழுவதுமாய்
மூடி மறைக்கப்பட்டுள்ள
கருவுருவ சிலையின் மீது
அமரமுயலும் காக்கையொன்று
கல்லெறிந்து விரட்டப்படுகிறது!


அரைமணி நேரம் கடந்தபின்னே
ஆர்பரிப்பும் அமைதியாய் ஓய்ந்து
தலைவரின் புடைசூழ வந்த கூட்டமெல்லாம்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
காணமல் போயிருந்தது!
மீண்டுமந்த காக்கை காற்றிலேறி
அச்சிலையின் மேலமர்ந்து
தலைவர் சென்ற வழியை நோக்கி
ஏளனமாய் சிரித்துக்கொண்டே
திறப்புவிழா கண்ட சிலையின் தலைமீது
எச்சத்தை விட்டபின்னே
சுதந்திரமாய் பறந்து போனது!


 - இரா.ச.இமலாதித்தன் 




_

Post a Comment

1 கருத்து:

க.பாலாசி சொன்னது…

கவிதை நல்லாருக்குங்க.. தொடர்ந்து எழுதுங்கள்...

கருத்துரையிடுக