என் வழி நீயானாய்!


-01-

உன் காலடிபட்ட இடங்களெல்லாம்
எனக்கான சாலையின்
வழித்தடங்களாகி போனது.
இனி மிச்சமிருக்கும் வாழ்நாட்களும்
உன்னை பின் தொடர்ந்தே
என் பயணம் அமையும்!

-02-

எங்கு தொலைத்தேனென தெரியாமல்
உன் கண்களுக்குள்
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைவதும் மீள்வதுமாக நீளும்
இந்த தேடலும் ஓர் அழகு,
உன்னைப்போலவே!

-03-

உன் விரல்கள் கோர்த்து,
பல கதைகள் பேசி,
நெடுந்தூர பயணங்களில்
நம்மிருவரின் கைகள் கூட கட்டியணைத்து
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
விரல்கள் வழியாக!
நாம் தான் ஊமையாகிறோம்!

-04-

ஒவ்வொரு முறை பேசி முடிக்கையிலும்
எதையுமே பேசவில்லையென்றே தோன்றுகிறது.
மிச்சமிருப்பதை பேசி முடிக்க
வாழ்நாளே தேவைப்படலாம்,
துணையாய் வந்துவிடு!

-05-

உன் கண்களுக்குள் குடியிருக்க
தவமிருந்து கொண்டிருக்கிறது என்னுயிர்;
வரம் கிடைக்கும் முன்
உன்னுள் சங்கமிக்க ஆயத்தமாகிறது மனது;
இனி நீயே நான்தான்!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

No comments:

Post a Comment