ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!


சுழியம் ஒன்றென்ற பைனரிக்களால்

கணினி மொழி படித்த பின்னும்
எமக்கான களங்கலெல்லாம்
என்திசையும் முற்றுகையிட 
வெறிச்சோடிய எதிர்கால சுவர்களில்
சித்திரங்கள் தீட்டிக் கொண்டோம்
தூரிகைகள் ஏதுமின்றி!

இருநூறு வருடங்கள் அடிமைப்படுத்திய
இருபத்தாறு எழுத்தே கொண்ட
அந்நிய ஆங்கிலம்
இன்றெங்கள் தகப்பன்மொழியாய் உருவெடுக்க;
இருநூறு சொச்சம் எழுத்துகள் கொண்ட
பல்லாயிர ஆண்டுகள் பழமைமிக்க
எமது தாய்மொழியின் கருகலைத்தோம்!

ஆங்கிலம் என்பது அறிவல்ல
அது வெறும் மொழி என்பதை மறந்தே
தமிழனென்ற அடையாளத்தை
எம் சுயத்தோடு இழந்து 
சூழ்நிலை கைதியானோம்!

அழகியல் மொழியான
அம்மாவென்ற வார்த்தை கூட
வழக்கொழிந்து போக 
பிரமிடுகளுக்குள் உயிரற்று கிடக்கும்
வெற்றுடலாகி போன
மம்மியென மொழிச்சிதைவோடு  
உச்சரிக்க வைத்தோம்
நிகழ்கால தலைமுறையை!

உலக மொழிகளின் ஆணிவேர்
செந்தமிழை தொலைத்தது போலவே  
எமக்கான பூர்வீக அடையாளங்களையும்
ஒவ்வொன்றாய் இழந்த பின்னே
அமீபாவாய் அடையாளங்கள் ஏதுமின்றி
யாராகவோ வாழ்ந்திருப்போம்
ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!

 - இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக